உலகம்

ட்ராலிக்குள் குழந்தையை வைத்துவிட்டு சென்றுவிடும் பெற்றோர்... இப்படியுமொரு பழக்கமா?

ட்ராலிக்குள் குழந்தையை வைத்துவிட்டு சென்றுவிடும் பெற்றோர்... இப்படியுமொரு பழக்கமா?

Rishan Vengai

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் குழந்தைகளின் நலனிற்காகவென்று ஒரு வித்தியாசமான வழக்கமுறை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக நம் நாட்டில் தாய்மார்கள் யாரும் பிள்ளைகளை பிரிந்து இருப்பதையோ, இருக்க அனுமதிப்பதையோ கூட நம் பெரியோர்கள் மற்றும் முன்னோர்கள் யாரும் காலம் காலமாக விரும்பியதோ அனுமதித்ததோ இல்லை. குழந்தைக்கு ஏதாவது எறும்பு கடித்தால் கூட `அப்படி குழந்தையை விட்டுவிட்டு என்ன பண்ணிட்டு இருந்திங்க?’ என்ற குரல் தான் அதிகமாகவே எழும். மேலும் ‘உங்களால குழந்தையை கூடவே இருந்து பார்த்துக்க முடியலனா கொடுத்துடுங்க நாங்க பார்த்துக்கிறோம்’ என்ற உறவினர்களின் பலத்த எதிர்ப்பும் வசைபாடலும், குழந்தைக்கு சிறியதாக ஏதாவதென்றாலும் கூட நம் நாட்டின் குடும்ப சூழல்களில் நடப்பதை கண்டும், கேள்வியும் பட்டிருப்போம்.

ஆனால் டென்மார்க்கில் குழந்தையின் நலனிற்காகவென்று குழந்தையை தனியாக வெளியே விடப்படும் ஒரு விநோத பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருவது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மேலும் அந்த விநோத பழக்கம் டென்மார்க் நாட்டில் கலாச்சாரமாக கடைபிடிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்பெசல் கேர் நர்ஸ்களிடமிருந்தும் மற்ற எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

மழையோ குளிரோ வெயிலோ குழந்தைகளை வீட்டிற்கு வெளியே தூங்க வைக்கும் விநோத பழக்கம்!

அப்படி என்ன விநோத பழக்கம் என்றால் குழந்தைகளை தூங்கவைக்க, வீட்டிற்கு வெளியே வெட்டவெளி பகுதியில் ஒரு டிராலியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பாதுகாப்பான செட்டப்பில் குழந்தையை வைத்துவிட்டு, தூங்கி எழும் வரை அவர்களை வீட்டிற்கு வெளியே விட்டுவிடுகிறார்கள். அலாரம் ஒன்றை அருகே வைத்துவிட்டு, குழந்தை அழும் சத்தம் கேட்டதும், அலாரத்தின் உதவியால் வந்து குழந்தையை வீட்டிற்குள் எடுத்து செல்கிறார்கள்.

ஆரோக்கியத்திற்காக சொல்லப்படும் காரணங்கள்!

குழந்தைகளை வெட்டவெளியில் தூங்க வைப்பதால், கிடைக்கும் இயற்கையான புதிய காற்று குழந்தைகளின் உடல்நலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் மற்றும் தொற்று அபாயத்தை குறைத்து ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நன்றாக உறங்கவும் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் உட்புற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிவும் இது உதவுகிறதாம். இந்த வழக்கத்தை குழந்தைகளின் தாய்மார்கள் மட்டுமின்றி குழந்தைகளின் வெல் கேர் செவிலியர்களும் சேர்ந்து மற்றவர்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.

நகரும் டிராலியில் செய்யப்பட்டிருக்கும் அமைப்பு!

குழந்தைகளுக்கு குறைவான எடை உள்ள கம்பளி ஆடையை அணிவிக்கின்றனர். படுக்கவைக்கப்படும் அடிப்பகுதியில் மிருதுவாக இருக்கும் மெத்தையும் வைக்கப்படுகிறது. இந்த செட்டப்பானது குழந்தையின் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. மற்றும் அதிக வெப்பத்தை ஏற்படுத்தாமலும் பாதுகாக்க உதவுகிறது.

எப்போதெல்லாம் இதை கடைபிடிக்கின்றனர்?

பெற்றோர் கஃபே செல்லும்போதும், ஷாப்பிங்க் செல்லும்போதும் கூட குழந்தைகளை இந்த செட்டப்பில் வெளியே வைத்துவிட்டு செல்கின்றனர். குழந்தை வைக்கப்பட்டிருக்கும் அந்த ஸ்டிராலரில் பேபி மானிடரும் பொருத்தப்பட்டுள்ளதால் குழந்தை திருடுபோகும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்கிறது.

குழந்தையை வெளியில் தூங்கவைப்பது குறித்த மருத்துவர்களின் பார்வை!

1926ஆம் ஆண்டில், ஒரு ஐஸ்லாந்து மருத்துவர் குழந்தைகளை வெளியில் தூங்க வைப்பது நல்லது என்று பரிந்துரைத்தார். மேலும் குளிர்ந்த வெப்பநிலையிலும் கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்ட்ரோலர்களில் வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

மற்றும் பயோடெக்னாலஜி தேசிய மையத்தின் 2008 ஃபின்னிஷ் ஆய்வில், புதிய காற்று மற்றும் இயற்கையின் அமைதியான ஒலிகள் காரணமாக, சூடான உடையில் வெளியில் தூங்கும் போது, தங்கள் குழந்தைகள் அதிக நீண்ட மற்றும் ஆழமான தூக்கத்தை எடுத்துகொள்கின்றனர் என்று கருத்துக்கணிப்பில் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

விநோதமாக பார்க்கப்படும் இந்த நிகழ்வால் ஏற்பட்ட ஒரு சம்பவம்!

டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகளில் இது மிகவும் பொதுவானது என்றாலும், டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தையை நியூயார்க் நகர உணவகத்திற்கு வெளியே தூங்க வைத்ததற்காக 1997ஆம் ஆண்டில் 36 மணிநேரம் சிறையில் இருந்தார்.

டென்மார்க்கின் சமூக விவகார அமைச்சகம் 0 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இதுவரை 97 குழந்தை கடத்தல்கள் மட்டுமே நிகழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செய்திகள் டென்மார்க் நாட்டை உலகின் இரண்டாவது பாதுகாப்பான நாடாக வரிசைபடுத்தியுள்ளது.