மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது இரண்டு வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிக் இறந்து கிடக்கும் அவர்களது புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கெனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை டொனால்டு ட்ரம்ப் விதித்து வருகிறார்.
மெக்சிகோவில் ஏற்படும் வன்முறை காரணமாகவும்,ஏழ்மை காரணமாகவும் அங்கிருந்து வெளியேறும் மக்கள் அமெரிக்காவில் புகலிடம் தேடுகிறார்கள். தற்போது அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மெக்சிகோவில் இருந்து உயிரை பணயம் வைத்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது இரண்டு வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிக் இறந்து கிடக்கும் அவர்களது புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்டின்ஸ் மற்றும் அவரது இரண்டு வயது மகள் டெக்சாஸ் அருகே உள்ள ஆற்றைக்கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
முகத்தை நேற்றில் புதைத்தப்படி கரை ஒதுங்கிய அவர்களின் உடல்களை பத்திரிகையாளர் ஜூலியா என்பவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது உலக நாடுகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகளின் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் சட்டவிரோதமாக உயிரை பணயம் வைத்து அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டாம் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.