நடிகர் வடிவேலு திரைப்படம் ஒன்றில், ‘தன் கிணத்தைக் காணவில்லை’ எனக் காவல்துறையை அழைத்துவந்து புகார் அளிப்பார். அதுபோன்ற காமெடியை நினைவுபடுத்தும் விதமாக உலகில் கடல் ஒன்றே காணாமல் போயிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்குக் காரணம் காலநிலை மாற்றமே எனக் கூறப்படுகிறது.
அதுவும், 50 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய கடலாக இருந்த நீர்நிலை ஒன்று, தண்ணீர்வற்றி மறைந்து போயிருப்பதுதான் தற்போது அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்திருந்த கடலின் பெயர்தான், ஆரல் (Aral Sea). இதுதான் தற்போது அழிந்துபோயிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நியோஜின் காலத்தின் இறுதியில் (2.3 கோடி முதல் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) உருவான இந்த ஏரி, கடலைப்போலப் பிரம்மாண்டமானதாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த ஏரியை ’ஆரல் கடல்’ என அழைத்துள்ளனர். 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த கடல், உலகின் 4வது பெரிய கடல் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. 1960களில் சோவியத் யூனியன் தனது நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு இங்கிருந்து நீரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததன் விளைவு, அதன் பரப்பளவு சுருங்கத் தொடங்கியது. அமெரிக்காவின் நாசா, இந்த ஆரல் கடல் மாயமானது தொடர்பாக விரிவாக ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. இதன்மூலம், கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம்போல் மாறிவிட்டதாக கூறப்படுகிற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.