உலகம்

சீனாவில் 132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் - பயணித்த அனைவரும் உயிரிழப்பு?

JustinDurai

சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் குவாங்ஸி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து புறப்பட்டு குவாங்சோ நோக்கி சென்றது. குன்மிங்கில் இருந்து அந்நாட்டு நேரப்படி திங்கள்கிழமை பிற்பகல் 1.10மணிக்கு விமானம் புறப்பட்டது. பகல் 2.52மணிக்கு குவாங்சோ விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய விமானம், உரிய நேரத்தில் வரவில்லை. இந்த நிலையில்தான், குவாங்ஸி மாகாணத்தில் சுமார் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

மலைப் பகுதியில் விமானம் விழுந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்து நடத்த இடத்திலிருந்து விமானத்தின் சில பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. விமானத்தில் பயணித்த 132 பயணிகள் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் விழுந்து நொறுங்கிய காட்சிகளும், விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் அங்குள்ள கனிம நிறுவனத்தின் சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறப்படுகிறது.

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டனர். முதல் கட்டமாக 505 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கியுள்ள நிலையில், கூடுதலாக 450 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். எனினும், விமானம் விழுந்த இடத்தில் காட்டுத் தீ பரவியதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விமானம் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விபத்து நிகழ்ந்ததாக, சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்துக்கு தங்களது நிறுவன ஊழியர்களை அனுப்பி வைத்திருப்பதாகவும், விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக, பிரத்யேக தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து சுமார் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த கொண்டிருந்த விமானம், 2.15 நிமிடத்தில் 9 ஆயிரத்து அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் மூவாயிரத்து 225 அடி கீழே இறங்கி ரேடார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அளவுக்கு ஒரு விமானம் கீழே இறங்க சுமார் 30 நிமிடங்கள் ஆகும் என்றும் கணிக்கப்படுகிறது.



விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யாரும் வெளிநாட்டினர் இல்லை என சீன அரசு உறுதி செய்துள்ள நிலையில், விமான விபத்து தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளை முடுக்கி விடவும், தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ள ஜி ஜின்பிங், விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

விமான விபத்து எதிரொலியாக, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான தளத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகளில் 82 சதவிதம் பேர் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். அதே வேளையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி, விபத்துக்கு காரணமான 737-800 ரக விமானங்களின் சேவை நிறுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் கறுப்பினப் பெண்