இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் ஒற்றை விரலால் 129.50 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 48 வயதான ஸ்டீவ் கீலர் என்ற அந்த நபர் தனது நடுவிரலால் இந்த எடையை 8 விநாடிகள் தூக்கி பத்தாண்டுகளாக நீடித்த முந்தைய சாதனையை முறியடித்தார். இதற்கு முன் பெனிக் இஸ்ரேலயன் என்பவர் 121.70 கிலோவை தனது நடுவிரலால் தூக்கியதே சாதனையாக இருந்தது.
ஸ்டீவ் கீலர் தற்காப்புக் கலைஞராக பணியாற்றி வருகிறார். ஸ்டீவ் தனது 18 வயதிலிருந்தே கராத்தே விளையாடி வந்தார். ஜூடோ விளையாடும்போது தனது கைக்கு நம்பமுடியாத வலிமை இருப்பதை ஸ்டீவ் அறிந்து கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு விரலை வைத்து 100 கிலோ எடைக்கு மேல் தூக்கும் பயிற்சி செய்து வருகிறார்.
129.50 கிலோ எடையை தனது நடுவிரலால் தூக்கி கின்னஸ் சாதனை படைத்த பின்னர் பேசிய ஸ்டீவ் கீலர், “இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையானது.ஆனால் என் விரல்கள் வலுவாக உள்ளன. இவ்வளவு எடையை தூக்கியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார்.