உலகம்

இளமையாக இருப்பது அத்தனை கொடுமையா? - சீன நபருக்கு நேர்ந்த சோகம்!

இளமையாக இருப்பது அத்தனை கொடுமையா? - சீன நபருக்கு நேர்ந்த சோகம்!

JananiGovindhan

இளமையாகவே இருப்பதெல்லாம் அனைவருக்குமே வாய்த்துவிடாது. அப்படி அமைந்துவிட்டால் இயற்கை அவர்களுக்கு கொடுத்த கொடையாகவே இருக்கும். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் தான் இளமையாக இருப்பதால் மிகவும் கஷ்டப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

அது ஏன் தெரியுமா?

27 வயதான மேவு ஷெங் என்ற நபர் இளமையாகவும், குழந்தைத்தனமான முகம் கொண்டவராகவும், உயரமும் சற்று குறைவாக உள்ளதால் அவரால் எந்த வேலையிலும் சேர முடியாமல் போனதாக டிக்டாக் தளத்தில் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வீடியோவில், “தன்னுடைய தந்தை தற்போதுதான் பக்கவாத நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் நானும் வேலைக்கு செல்ல முற்பட்டு வருகிறேன். ஆனால் என்னுடய இளமைத் தோற்றம் காரணமாக எவரும் எனக்கு வேலை கொடுக்க தயங்குகிறார்கள்.

சில இடங்களில் ‘உன்னை வேலையில் சேர்த்தால் குழந்தை தொழிலாளியை பணியமர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழும்’ எனக் கூறுவதால் கிடைக்கும் வாய்ப்புகளையும் இழந்து வருகிறேன்.” என ஷெங் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவரது பிறந்த ஆண்டான 1995 இடம்பெற்றுள்ள அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.

ஷெங்கின் வீடியோ டிக்டாக்கில் பெருமளவில் வைரலானதோடு, அவர் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருக்கிரார்கள். இதுபோக, ஷெங்கிற்கு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளும் குவிந்திருக்கின்றன.

அதனையடுத்து ஷெங்கிற்கு நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்திருக்கிறது. தற்போது தன்னுடைய குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்த பிறகு தனக்கென ஒரு துணையை தேடிக் கொள்ள போவதாகவும் ஷெங் தெரிவித்துள்ளதாக சீனாவின் Oddity Central என்ற செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.