model image puthiya thalaimurai
உலகம்

இனி டவர் இன்றி பேசலாம்.. செயற்கைக்கோள் ஆய்வில் வெற்றி.. தொலைத்தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய சீனா!

தொலைத் தொடர்புத் துறையில் சீனா, ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Prakash J

அண்டை நாடான சீனா, கடந்த சில ஆண்டுகளாக செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாகச் செயற்கைக்கோள் மூலமாக பேசும் வசதியைக் கொண்டுவர ஆய்வு மேற்கொண்டது. ’விண்வெளியுடன் இணைத்தல்’ என்ற திட்டத்தின்கீழ் Tiantong -1 என்ற செயற்கைக்கோள்களை அனுப்பி, இத்தகைய சோதனையை மேற்கொண்டது. அந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் இத்தகைய சோதனையில் ஈடுபட்டு வந்த சீனா, தற்போது இதில் வெற்றிபெற்றதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஸ்மார்ட்போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, முற்றிலும் தரையில் செல்போன் டவர்கள் இல்லாமலேயே செல்போன்களில் பேசலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது Tiantong என்ற 3 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாகச் செயற்கைக்கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கைச்சீற்றங்கள் ஏற்படும்போதுகூட, எந்த இடையூறும் இன்றி தொலைத்தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பொருளாதார தடை; அமெரிக்காவின் அறிவிப்பும் தற்போதைய நிலையும்!

இதையடுத்து, சீனா தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாட்டிலைட் அழைப்புகளை சப்போர்ட் செய்யும் உலகின் முதல் போன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், சீனாவின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனால், உலக அளவில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் முன்னணி தயாரிப்பு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இனி வரும்காலங்களில் செயற்கைகோள் வசதியுடன் பேசும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் வகையில் ஈடுபட்டுள்ளனவாம்.

இதையும் படிக்க: மியான்மர்| சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி!