உலகம்

ஏமனில் பஞ்சம் ! ஆயிரக்கணக்கில் பலியான பச்சிளம் குழந்தைகள்

webteam

ஏமனில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் போர் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தால் 85 ஆயிரம் குழந்தை‌கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நீடித்து வருகிறது. தலைநகர் சனா உள்பட கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ராணுவத்தினரும், ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டின் வான் எல்லை மற்றும் துறைமுகங்களை சவுதி அரேபியா மூடியுள்ளது. இதன் காரணமாக ஏமனுக்கு அத்தியாவசிய பொருட்கள் சென்று சேருவது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் விலைவாசி, உணவுப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடும் அவலம் ஏற்பட்டிருப்பதாக தனியார் தொண்டு நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்தது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பஞ்சத்தால் உயிரிழப்பதை தடுக்க போர் நிறுத்தம் அவசியம் என அண்மையில் ஐ.நா.வும் எச்சரித்திருந்தது. மேலும், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பட்டி‌னியால் வாடி வருவதாகவும் கவலை தெரிவித்திருந்தது. 

இந்தச் சூழலில், ஐ.நா.வின் SAVE THE CHILDREN அமைப்பு கடந்த மூன்றாண்டுகளில் பஞ்சத்தால் சுமார் 85 ஆயிரம் குழந்தைகள் உ‌யிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.