lebanon - isreal facebook
உலகம்

பதிலடி கொடுத்த லெபனான்.. ஹெஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு!

PT WEB

லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான சண்டையில் தங்களின் 8 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. லெபனானின் வான்பரப்பில் எப்போதும் இஸ்ரேலின் ஏவுகணைகள் பறந்த வண்ணம் உள்ளன. பதிலடி தாக்குதலை ஹெஸ்புல்லா அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.

தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் 3 விமானப்படை தளபதிகள் உட்பட 8 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பென்ஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரான் என்ற தீய சக்தியின் நடுவில் இருக்கிறோம், அதனை முறியடிக்க அனைவரும் ஒன்றாக பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

8 வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து தெற்கு லெபனானில் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் அதிகரித்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேபோல், சிரியாவின் டெமாஸ்கஸ் நகர் மீது ஏவுகணைகளை இஸ்ரேல் வீசியுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் சண்டை அதிகரித்த வண்ணம் இருப்பதால், அங்குள்ள மக்களை மீட்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டவரை விமானங்கள் மூலம் மீட்டு வருகின்றன.