அமேசான் எக்ஸ் தளம்
உலகம்

5 நாட்கள் வேலை | அதிகாரி போட்ட அதிரடி உத்தரவு.. வெளியேறும் 73% அமேசான் ஊழியர்கள்?.. ஆய்வில் தகவல்!

அதேநேரத்தில் ஆன்டி ஜெஸ்ஸி எழுதியிருக்கும், இந்தக் கடிதம் அமேசான் ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதில் பலர் புதிய வேலைவாய்ப்புகளைத் தேட இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Prakash J

உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான், அடுத்த ஆண்டு (2025) முதல் தங்கள் நிறுவன ஊழியர்கள் வாரத்தின் 5 நாட்களுக்கு அலுவலகத்திற்கு வந்து வேலைசெய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆன்டி ஜெஸ்ஸி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், "கொரோனாவுக்கு முன்பு எப்படி அமேசான் நிறுவனம் செயல்பட்டதோ, அந்த நிலைக்கு அடுத்த ஆண்டு முதல் திரும்பப் போகிறோம். கடந்த 15 மாதங்களாக ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிகிறார்கள். இது நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இவ்வாறு அலுவலகத்தில் வந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது நிறுவனத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது என்பதால், அடுத்த ஆண்டு முதல் வாரத்தின் ஐந்து நாட்களும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். ஏனெனில் அலுவலகத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்வதில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!

2024, ஜனவரி 2 முதல் இந்த நடவடிக்கை தொடங்க இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் அறிவிப்புக்குப் பிறகு, டெல் நிறுவனமும், தனது ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் ஆன்டி ஜெஸ்ஸி எழுதியிருக்கும், இந்தக் கடிதம் அமேசான் ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதில் பலர் புதிய வேலைவாய்ப்புகளைத் தேட இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிளைண்ட் என்ற வேலை மறுஆய்வு தளம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், ’அமேசானின் பணியாளர்களில் 90%க்கும் அதிகமானோர் புதிய அலுவலகக் கொள்கையை விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர். மேலும், 73% அமேசான் ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவது பற்றி யோசித்து வருவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆன்டி ஜெஸ்ஸி ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு மறுநாள் எடுக்கப்பட்டுள்ளது. 2,585 அமேசான் ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரூ.1.5 லட்சம் விலையுள்ள ஐபோனை டெலிவரி செய்ய சென்ற ஊழியர் கொலை.. உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!