ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்ய 6வது முறையாக நிகழ்த்தப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் நல்வாய்ப்பாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸ் எனும் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “விளாடிமிர் புதின் சென்ற சொகுசு காரின் இடதுபக்க முன்பகுதி சக்கரத்தின் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக காரிலிருந்து புகை கிளம்பியதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காரை விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கார் நிறுத்தப்பட்டு, விளாடிமிர் புதின் பத்திரமாக காரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதின் தனது இல்லத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்வதற்கான இந்த முயற்சி எப்போது நடந்தது என்று அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக 2017 ஆம் ஆண்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் இராணுவ இழப்புகளை ரஷ்யா சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட பல காரணங்களை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசியல்வாதிகள் குழு, புதினுக்கு எதிராக தேச துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுமாறு ரஷ்ய மேலவை சபையிடம் முறையிட்ட ஒரு வாரத்திலேயே ஆறாவது படுகொலை முயற்சியில் இருந்து புதின் தப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது.