வடகொரியா தொடர்ந்து 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐ.நா.வின் பொருளாதார தடைகள், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அண்மையில் ஜப்பான் வான்வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை செலுத்தி அமெரிக்கா, தென்கொரியா நாடுகளை அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து அதிக அளவிலான ஏவுகணை சோதனைகளை நடத்தும்படி அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் 6-வது முறையாக வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையை விட இந்த சோதனை மிகுந்த வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொலைதூர ஏவுகணையில் பொருத்துவதற்கு ஏற்ற வகையில் சிறிய அளவிலான ஹைட்ரஜன் அணுகுண்டை உருவாக்கி இருப்பதாக வடகொரியா அறிவித்த சில மணிநேரத்தில் இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டிருப்பது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.