ஜான்வி கந்துல்லா file image
உலகம்

அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்: கிண்டல் பேசிய காவலரைப் பணிநீக்கம் செய்ய 6,700 பேர் கையெழுத்து மனு!

அமெரிக்காவில் இந்திய மாணவி மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர் டேனியலை, உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளனர்.

Prakash J

கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மாணவியின் மீது மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விபத்து குறித்தும் ஜான்வி மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் உடலில் இணைக்கப்பட்டிருந்த கேமராவிலேயே பதிவாகி உள்ளது.

ஜான்வி கந்துல்லா

’இறந்த பெண் ஒரு சாதாரணமானவர்தான். பெரும் மதிப்புமிக்கவர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்திய தூதரகம், அமெரிக்க அரசிடம் முறையிட்டது. ஜானவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும், வீடியோவில் கேலி செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தூதரகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகம், ஜான்வி கந்துல்லாவுக்கு பட்டமளிக்க முன்வந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த விபத்து குறித்து சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு விளக்கமளித்துள்ள டேனியல், ’நகைச்சுவையாக தனிப்பட்ட முறையில் பேசிய விவகாரம், கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என நம்பினேன். என் கடமைக்கும், நான் பேசியதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சங்கம், ’விபத்து நடந்தபோது பேசிய உரையாடலின் ஒருபகுதி மட்டுமே வெளியாகியுள்ளது. மாணவிக்கு உதவும் வகையில் டேனியல் கூறிய கருத்துகள் எதுவும் அதில் வெளியிடப்படவில்லை’ என கூறியுள்ளது.

சியாட்டில் போலீஸ்

இந்த நிலையில், மாணவி குறித்து கேலி பேசிய டேனியலை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உட்பட 6,700 பேர் மனு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளனர். இந்த மனு, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.