உலகம்

600 தலிபான்கள் பலி: சிம்ம சொப்பனமாக விளங்கும் 'பாஞ்ச்ஷிர்' மாகாணம்

Veeramani

ஆப்கானிஸ்தானின் பாஞ்ச்ஷிரில் நடைபெற்ற மோதலில் தலிபான்கள் 600 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டையே கைப்பற்றிவிட்ட போதிலும், ஒரு மாகாணத்தை மட்டும் நெருங்க முடியாமல் திணறி வருகின்றனர் தலிபான்கள்.

34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 33 மாகாணங்களை கைப்பற்றிவிட்டனர். ஆனால் ஒரு மாகாணத்தை கைப்பற்றுவது நாட்டை கைப்பற்றிய அளவுக்கு அத்தனை எளிதானதாக இல்லை. அந்த மாகாணம் தான் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாஞ்ச்ஷிர். அமெரிக்கப்படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்ட போதிலும் தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்கிறது.

பாஞ்ச்ஷிர் மாகாணம் தேசிய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் அவர்களுக்கு தலைவலியாக இருக்கிறது பாஞ்ச்ஷிர் மாகாணம். இவர்கள் எப்போதும் யாரிடமும் அடிபணிந்தது கிடையாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபாஹிம் தாஷ்தி தெரிவித்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான்கள் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பாஞ்ச்ஷிர் பகுதி தங்கள் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால் தங்களால் வேகமாக முன்னேறிச்செல்ல முடியவில்லை என்று தலிபான்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பாஞ்ச்ஷிர் தலைநகரான பசாபரக்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது.