ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் அல்கொய்தா உடன் தொடர்புடைய ஆயுத அமைப்பு நடத்திய தாக்குதலில் சில மணி நேரத்தில், 600 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பர்சலோகோ என்ற பகுதியில், மக்கள் பாதுகாப்புக்காக பதுங்குக்குழிகளை நாடி ஓடியபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் புர்கினா ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் பொதுமக்கள் அல்ல என்றும் JNIM அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சடலங்களை மூன்று நாட்கள் சேகரித்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாலியை தளமாகக்கொண்டு புர்கினா பாசோவில் செயல்படும் அல்கொய்தாவின் துணை அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) அமைப்பினர் டூவீலர்களில் சென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பர்சலோகோ கிராமத்திற்குள் நுழைந்த அவர்கள், கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் எனப் பாராமல் கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 200 பேர் இறந்திருக்கலாம் என ஐ.நா சபை முதலில் தெரிவித்திருந்தது. JNIM அமைப்பு 300 பேரின் மரணத்துக்கு பொறுப்பேற்றது. தற்போது வெளியாகியிருக்கும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை 600 பேர் வரை மரணித்திருக்கின்றனர் எனக் கூறுகிறது. உலக அளவில் மோதல்கள், சண்டைகளை ஆராய்ச்சி செய்யும் ACLED பகுப்பாய்வு குழு, இந்த ஆண்டு மட்டும் அல்கொய்தா மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் புர்கினா பாசோவில் 3,800 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், 2015-ம் ஆண்டு முதல் தீவிரவாத அமைப்புகள் புர்கினாவில் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 20,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.