உலகம்

நாசாவின் சாதனையை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்!

webteam

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அதுபோல மனிதன் முதன்முதலில் நிலவில் இறங்கி காலடி வைத்த தினம் நாளையுடன் 50 ஆண்டுகளை எட்டவுள்ளது. நாசாவின் இந்த அசாதாரண சாதனையின் 50 ஆண்டுகள் நிறைவாவதை கொண்டாடும் விதமாக கூகுள் ஒரு சிறப்பான டூடுள் வீடியோவை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.

ஜூலை 20, 1969 இல், அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் “பஸ்” ஆல்ட்ரின் ஆகியோர் அப்பல்லோ 11 மிஷனில் சந்திரனில் இறங்கிய முதல் மனிதர்கள் ஆனார்கள். அன்று அவர்களுடன் சென்ற கமாண்ட் மாடூள் பைலட்டாக (Command Module Pilot) இருந்தவர் மைக்கேல் கொலின்ஸ். ஆனால் நிலவில் காலடி வைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கொலின்ஸின் குரல் போன்று சுமார் 4.37 நிமிடங்கள் உள்ள அந்த டூடுள் வீடியோவை அமைத்து அவரையும் சிறப்பித்துள்ளது, கூகுள்.

அதில் அப்பல்லோ 11 மிஷனின் கவுண்டவுன் தொடக்கம் முதல் மீண்டும் ஆராய்ச்சியாளர்கள் பூமியை அடைவது வரையிலான விண்வெளி பயணத்தை கண்முன் நிறுத்தியுள்ளது கூகுள்.  

அதில் ஆராய்ச்சியாளர்களின் பயண சாகசங்கள், அப்பல்லோ 11 மிஷனின் செயல்பாடுகள் போன்றவற்றை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கிக்கூறப்பட்டுள்ளது. சிறியோர் முதல் பெரியவர்கள் வரை எளிதில் புரிந்து கொள்ளும்படி இந்த வீடியோ டூடுள் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.