உலகம்

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம் 

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம் 

webteam

நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் அந்தச் சந்தேகத்தை முதல் செயற்கைகோள் ‘அப்போலோ 11’ தகர்த்தெறிந்து.  சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. அந்தப் பொன்விழா பொழுதை உலகமே இன்று திரும்பி பார்த்து கொண்டாடி வருகிறது.

நிலவிற்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்ய அமெரிக்க அரசு 1961ஆம் ஆண்டு திட்டமிட்டது. இதனை 1970ஆம் ஆண்டிற்குள் செய்து முடிக்கபோவதாக அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி மையம் நாசா அதற்காக முயற்சியில் முழுவீச்சில் இறங்கியது. நிலவிற்கு மனிதர்கள் செல்லும் செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். 

இதனையடுத்து 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. 

இதனைத் தொடர்ந்து நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். இந்தச் செயற்கைகோள் 8 நாட்கள் வரை நிலவில் ஆராய்ச்சி செய்துவிட்டு ஜூலை 24ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியது. 

இந்த மிஷன் குறித்து அதில் பயணித்த மைக்கேல் காலின்ஸ், “இந்த நிலவு பயணத்திற்காக உழைத்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் தங்களின் கடமையை சிறப்பாக செய்ததால்தான் இந்தப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது” எனத் தெரிவித்தார். 

மேலும் இந்தச் செயற்கைகோளை நிலவில் தரையிறக்கியது தொடர்பாக வேலை பார்த்த ஸ்டீவ் பேல்ஸ், “இந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக எனக்கு பஸ் ஆல்டிரிங் ஒரு  ‘1202 அலாரம்’ குறித்து கேட்டார். உடனே நானும் என்னுடன் பணியாற்றிய கார்மனும் இந்த அலாரம் குறித்து ஆராய்ந்தோம். நிலவில் செயற்கைகோள் இறங்குவதற்கு முன்பு இந்த அலாரம் மணி எழும்பியதால் எங்களுக்கு அதிக பயம் ஏற்பட்டுவிட்டது. எனினும் இது குறித்து ஆராய்ந்த போது அது விண்கலத்தில் இருந்த கணினியில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக வந்தது என்பதும் அதனால் செயற்கைகோள் தரை இறங்குவதில் எந்தவித பிரச்னை ஏற்படாது என்பதையும் கண்டுபிடித்தோம்.

அதன்பின்னர் இந்தத் தகவலை நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தெரிவித்தோம். இதனைத் தொடர்ந்து இந்தச் செயற்கைகோள் நிலவில் தரையிறங்கியது. அது உலக வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தருணமாக மாறியது.  20 ஜூலை, 1969 ஆண்டு என் வாழ்வில் மிகமிக மறக்க முடியாத நாள். இந்த நாளில் உலகமே ஒன்றாக இருந்தது. அப்போலோ செயற்கைகோள் அடைந்த வெற்றியே எனது வாழ்வில் நடைபெற்ற மிகப் பெரிய சாதனையாகும்” எனத் தெரிவித்தார்.