தீ விபத்தில் இருந்து தனது குடும்பத்தினர் 7 பேரைக் காப்பாற்றிய 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஜார்ஜியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அதில் 5 வயது சிறுவன் நோவ் வூட்ஸும் ஒருவன். அப்போது அந்த வீடு திடீரென தீப்பிடித்துள்ளது. வீடு தீப்பிடித்துவிட்டதை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்ட சிறுவன் நோவ், தீயைக் கண்டு அலறாமல், பதட்டப்படாமல் துரிதமாக செயல்பட்டுள்ளான். தன்னுடன் உறங்கிக் கொண்டு இருந்த தன் தங்கையை எழுப்பியவன், ஜன்னல் வழியாக வெளியே அனுப்பியுள்ளான். தங்கள் வீட்டு நாயையும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசியவன், உடனடியாக பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தன்னுடைய மாமா உள்ளிட்ட மற்ற அனைவரையும் எழுப்பியுள்ளான்.
சிறுவன் எழுப்பியதும் தீப்பிடித்ததை உணர்ந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனையும் தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டனர். தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு அனைவரையும் காப்பாற்றிய சிறுவன் நோவ்-க்கு தீயணைப்புத்துறையினர் பாராட்டு விழா ஒன்றையும் நடத்தியுள்ளனர். அதில் பேசிய அதிகாரி, ''சூப்பர் ஹீரோக்களுக்கு அளவு, உருவமெல்லாம் முக்கியமில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்த வரிசையில் வயதும் உண்டு. இன்று நான் நேரில் பார்க்கிறேன். இந்த 5 வயது சிறுவன் தன் குடும்பத்தையே காப்பாற்றியுள்ளான்'' என தெரிவித்துள்ளார்.
மேலும், தீ விபத்து போன்ற சமயங்களில் எப்படி செயல்பட வேண்டுமென்ற்று பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இந்த பாராட்டு விழாவில் சிறுவன் நோவ்-க்கு விருதும் வழங்கப்பட்டது.