இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 பேரை ஆஸ்திரேலியா எல்லைப்படை கைது செய்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி இலங்கையில் இருந்து ஒரு விசைப்படகில் 46 நபர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் குடியேற முயன்றதாக ஆஸ்திரேலியா எல்லை படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில, மூதூர் ஆகிய பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு குடியேற முற்பட்டவர்களை இலங்கைக்கு திருப்பிக் கொண்டு வரப்பட்ட சம்பவம் இதுவே முதல் முறையாகும்.