ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

‘ட்ரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்கணுமா...?’ - 4 ஆண்டு கடல் பயணத்தை ஏற்பாடு செய்த சொகுசுக் கப்பல்!

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

Prakash J

ட்ரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பண்கள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்கு அவர் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், அவருடைய பாதுகாப்பு குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

trump

இன்னொரு புறம், அவரது ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி போலல்லாது ட்ரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற பயம் இப்போதே பலரை தொற்றிக்கொண்டுள்ளது. அந்த வகையில், அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களை வெளியேற்றப் போவதாகவும், அகதிகள் ஊடுருவாமல் தடுக்க பிற நாடுகளுடனான அமெரிக்க எல்லைகளை மூடயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை ட்ரம்பே, தேர்தல் பிரசாரத்தின்போது அடிக்கடி குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, மிகப்பெரியளவிலான நடவடிக்கையாக இது அமையும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: முழு நேரமும் வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத ட்ரம்ப்பின் மனைவி.. காரணம் இதுதான்!

பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம்

இந்த நிலையில், ட்ரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருந்து விலகிச்செல்ல விரும்புவோருக்கு கப்பல் நிறுவனம் ஒன்று புதிய சலுகைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த நான்கு ஆண்டுகள் கடலிலேயே உலகத்தைச் சுற்றிவரும் பயணத் திட்டம் ஒன்றை Villa Vie Residences என்ற சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Villa Vie Odyssey க்ரூஸ் கப்பல் மூலம் 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு, ‘Skip Forward’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு 40 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் ஆகும்.

இந்தப் பயணத்திட்டத்திற்கு 4 வருடத்திற்கான பணத்தை முன்பணமாக செலுத்திய பின்னர், இருவர் தங்கும் அறைக்கு 1,59,999 அமெரிக்க டாலர்களும், ஒருவருக்கு 2,55,999 அமெரிக்க டாலர்களும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்குச் சென்று 7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 உலக அதிசயங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றி வர முடியும். சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம். இப்போது கப்பல் ஏறினால் அடுத்து 2029ஆம் ஆண்டுதான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள்.

இதையும் படிக்க: முழு நேரமும் வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத ட்ரம்ப்பின் மனைவி.. காரணம் இதுதான்!

இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில், “ஒருமுறை பணம் செலுத்துங்கள், மீண்டும் அதைப் பற்றி கவலைப்படவேண்டாம். நீங்கள் கப்பலில் காலடி எடுத்து வைத்தவுடன், உங்கள் பயணம் தொடங்குகிறது. உலகின் மிகச் சிறந்த மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களுக்குச் செல்லும்போது, ​​வழக்கமானவற்றை விட்டுவிட்டு, தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து வில்லா வீ நிர்வாக செயல் இயக்குநர் மைக்கெல் பீட்டர்சன், “ ‘தேர்தலில் அவர் (ட்ரம்ப் பெயரை அவர் குறிப்பிடவில்லை) வெற்றிபெற்றால் நாட்டைவிட்டு வெளியேறுவோம்’ என்று கூறியவர்களுக்கான சரியான பயணத்திட்டம் எங்களிடம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கு அரசியல்ரீதியில் பல்வேறு பார்வைகள் இருக்கின்றன. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகை ஆராய்வதற்கான ஆர்வத்தின் மூலம் நமது சமூகம் ஒன்றிணைகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ராஜஸ்தான் | தேர்தல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த சுயேட்சை வேட்பாளர்.. வன்முறையில் ஆதரவாளர்கள்!