வறுமை, பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் வாங்கி செலவு செய்து வெளிநாட்டிற்கு சென்று தன் வாழ்நாள் முழுவதும் படாத பாடு பட்டு பல மக்கள் ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடன்வாங்கி வெளிநாடு சென்று போராட்டத்தோடு வாழும் மற்றநாட்டு மக்களுக்கு மத்தியில், கடன் வாங்க கூட வழியில்லாமல் உயிர்வாழவும் பணம் இல்லாமல் சரக்கு கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து 14 நாட்கள் பயணித்த 4 நைஜிரியா நாட்டினரின் பயணம் வியக்கவைத்துள்ளது. நிம்மதியான வாழ்க்கைக்காக மனிதன் எந்தளவிலான முயற்சியையும் மேற்கொள்வான் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது இச்சம்பவம்.
வறுமை, பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு அரசியல் பிரச்னைகள் மற்றும் கொள்ளை சம்பவங்களால் போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து வரும் நைஜிரியா நாட்டு மக்களுக்கு இயற்கையும் சேர்ந்து அடிமேல் அடிகொடுத்து வருகிறது. இந்நிலையில் வறுமையை போக்கவும், குடும்பத்தை காப்பாற்றவும் 4 நைஜிரியர்கள் சரக்கு கப்பல் ஒன்றின் அடிப்பகுதியில் உயிருக்கு ஆபத்தான பயணத்தின் மூலம் பிரேசிலை அடைந்திருக்கின்றனர்.
நைஜிரியா லோகாஸ் பகுதியில் இருந்து ஜூன் 27ஆம் தேதி தொடங்கிய அவர்களுடைய பயணம் 14 நாட்கள் கழித்து பிரேசிலில் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 5,600 கிலோமீட்டர்கள் (3,500 மைல்கள்) அட்லாண்டிக் கடல் மீது பயணித்த அவர்களை, பிரேசில் நாட்டு தென்கிழக்கு துறைமுகமான விட்டோரியாவில் வைத்து பிரேசில் ஃபெடரல் போலீசார் மீட்டனர்.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, மீட்கப்பட்ட 4 பேரில் இரண்டு பேர் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்ல முடிவெடுத்திருப்பதாகவும், 38 வயது நிரம்பிய யேயே மற்றும் 35 வயது ரோமன் எபிமெனே இருவரும் பிரேசிலில் புகலிடம் வேண்டி விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் சாவ் பாலோ தங்குமிடத்திலிருந்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் யேயே, “இது எனக்கு ஒரு பயங்கரமான அனுபவம். கப்பலின் அடிப்பகுதியில் அமர்ந்து பயணிப்பது எளிதானது அல்ல. எனக்கு நடுக்கமாகவும், பயமாகவும் இருந்தது. நான் தற்போது பிரேசிலில் இருப்பதை நம்பவே முடியவில்லை. ஊரில் நாங்கள் பயிரிட்டிருந்த வேர்க்கடலை மற்றும் பாமாயில் பண்ணை பெரிய வெள்ளத்தில் அழிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் எங்களை வீடற்றவர்களாகவும் மாற்றியது. நான் ஒரு மீனவ நண்பரின் உதவியால் தான் சரக்கு கப்பல் வரை வந்து சேர்ந்தேன். அங்கு வந்து பார்த்த போது கப்பலின் அடிப்பகுதியில் பயணிக்க ஏற்கனவே 3 பேர் இருந்ததை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவர்களை அதற்கு முன்னர் நான் பார்த்ததே கிடையாது.
தெரியாமல் பயணிப்பதை கப்பல் பணியாளர்கள் பார்த்தால், தங்களை கடலில் தள்ளிவிட்டு கொன்றுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. அதனால் சத்தம் வராமல் இருப்பதை நாங்கள் அனைவரும் உறுதி செய்துகொண்டோம். கப்பல் அடிப்பகுதியில் இருந்து கீழே விழாமல் இருப்பதை தடுப்பதற்கு, வலையை கொண்டு ரட்டரை சுற்றி கட்டிக்கொண்டோம். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம் ஒருபுறம், இன்ஜின் சத்தம் மறுபுறம் என தூக்கமற்ற பயணமாகவே அமைந்தது. நாங்கள் ஐரோப்பாவிற்கு செல்வோம் என்று தான் நினைத்தோம், ஆனால் பிரேசிலில் இருப்பதை கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அனைத்தையும் தாண்டி நாங்கள் உயிருடன் இருக்கிறோம். இனி என் குடும்பத்தோடு என்னால் இருக்க முடியும்” என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
14 நாட்களாக பயணம் செய்தவர்களுக்கு எடுத்துச்சென்ற உணவுப்பொருட்கள் அனைத்தும் 10 நாட்களிலேயே தீர்ந்து போயுள்ளது. அதற்கு பிறகு வெறும் கடல்நீரையும், சிறுநீரை சேமித்தும் பயணித்ததாக தெரிவித்துள்ளனர். அத்தனை இன்னல்களை தாண்டி வந்த தங்களை பிரேசில் நாடு புகலிடம் வழங்கி வாழவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.