உலகம்

97 ஆயிரம் அரிய நூல்கள் தீக்கிரையாகிய நாள் இன்று

rajakannan

'எங்கே நல்ல நூல்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்' - என்று செகுவாரா சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்த, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நூலக அழிப்பான 'யாழ் நூலக அழிப்பு' நடந்த தினம் இன்று.

கடந்த 1981 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பிறந்த சில நிமிடங்களில், நள்ளிரவில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்த, இலங்கையின் யாழ் நூலகம் சிங்கள பேரினவாத வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டது. இந்த வன்முறையில் 97,000 அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், ஆரம்பகால கையச்சுப் பிரதிகள் தீக்கிரையாகின. இவற்றில் பெரும்பாலானவை தமிழில் எழுதப்பட்டவையாகவும் தமிழ் வரலாறு குறித்தவையாகவுமே இருந்தன.

1933ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, 1959ல் முதல் கட்டடம் கட்டப்பட்டு படிப்படியாக வளர்ச்சி அடைந்த யாழ் நூலகம் ஒரே நாள் இரவில் எரிந்து சாம்பலானது உலக அளவில் 'ஒரு நூலகத்தின் படுகொலை' - என்று கண்டிக்கப்பட்டது. இலங்கையில் தமிழ்த் தேசியப் போர் தோன்ற இதுவும் ஒரு காரணமானது.

இன்னும் யாழ் நூலகத்தில் அழிந்த நூல்களில் பல நமக்கு மீண்டும் கிடைக்காத நிலையில், யாழ் நூலக அழிப்பு தமிழ் மக்களின் மிகப்பெரிய இழப்பாகவே நினைவுகூறப்படுகிறது.