உலகம்

விசாரணைக்கு சென்ற இளம்பெண் மரணம்! ஈரானில் விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் எதிர்ப்பு புரட்சி!

விசாரணைக்கு சென்ற இளம்பெண் மரணம்! ஈரானில் விஸ்வரூபம் எடுத்த ஹிஜாப் எதிர்ப்பு புரட்சி!

சங்கீதா

முறையாக ஹிஜாப் அணியாததாக குற்றஞ்சாட்டப்பட்டு, காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 22 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தநிலையில், ஈரானில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக போராட்டம் வெடித்துள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடுகள் அதிகம். அதுவும் பொதுவெளியில் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம். இதைக் கண்காணித்து ஹிஜாப் அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நன்னெறிப் பிரிவு காவலா்கள் உள்ளனா். இந்நிலையில், கடந்த வாரம் நன்னெறிப் பிரிவு காவலா்கள் தலைநகர் தெஹ்ரானில் ரோந்து சென்றபோது, மஹ்சா அமினி என்ற 22 வயது நிரம்பியப் பெண், ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி, அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மஹ்சா அமினியை, காவலர்கள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவர், கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், 3 நாட்கள் கழித்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவலா்கள் விசாரணையின்போது கொடூரமாக துன்புறுத்தியதால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாகப் புகாா் எழுந்தது.

ஆனால், மஹ்சா அமினி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், அவரை காவலர்கள் யாரும் துன்புறுத்தவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரானில் கலவரம் வெடித்துள்ளது. விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளம் பெண், துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நியாயம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் ஒருபகுதியாக பெண்கள் தங்கள் தலைமுடிகளை வெட்டி, வீடியோ வெளியிட்டு புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் சாலைகளில் ஹிஜாப் உள்ளிட்ட துணிகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மஹ்சா அமினியின் தந்தை அம்ஜத் அமினி, ஈரானிய செய்தி வலைதளம் ஒன்றுக்கு அளித்துள்ளப் பேட்டியில், தனது மகளுக்கு உடல்நலக் கோளாறுகள் எதுவும் இல்லை என்றும், காவலர்கள் தாக்கியதில் அவளின் கால்களில் காயம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், தனது மகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதை சிலா் பாா்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்களில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் இறுதி முதல் போராட்டம் தீவிரமடைந்தநிலையில், ஈரானின் 50-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. சமூகவலைத்தளங்கள் மூலம் போராட்டக்காரர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து, போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இதனால் பல இடங்களில் இணையதளங்களை முடக்கியும் ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இந்த விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா உள்பட பல்வேறு உலக நாடுகளும் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றது.