உலகம்

துருக்கியில் 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: 3,600 பேர் உயிரிழப்பு

துருக்கியில் 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: 3,600 பேர் உயிரிழப்பு

JustinDurai

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த  நிலநடுக்கங்களால் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று (திங்கள்கிழமை) அடுத்தடுத்து ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளது. இதுவரை 3,600-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல மாடி அடுக்குமாடி கட்டிடங்களும் அடங்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி, துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.  அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன.  வெளியே ஓட்டம் பிடித்தவர்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் அடிக்கடி ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவில் உயிர் சேதமும் பொருள் சேதமும் உண்டாகிறது. இதற்கு முன்பு அந்நாட்டின் கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் 1939ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 33,000 பேர் உயிரிழந்தனர். அதற்கடுத்து 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.