உலகம்

காபூல் உள்துறை அமைச்சகம் மற்றும் மசூதியில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

காபூல் உள்துறை அமைச்சகம் மற்றும் மசூதியில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி; 25 பேர் படுகாயம்

Sinekadhara

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகம் அருகிலுள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் காபூலில் பலத்த பாதுகாப்புமிக்க உள்துறை அமைச்சக வளாகத்திற்கு அருகிலுள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், மசூதி பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டது மற்றும் சில நேரங்களில் உள்துறை அமைச்சக ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சக வளாகம் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்த பாதுகாப்பான பகுதியாக உள்ளது. உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபீ டக்கூர் மறுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் பலரும் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் பலர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலைக் கண்டித்து, ஆப்கானிஸ்தானின் ஹசாரா சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கறுப்பு உடை அணிந்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் தற்போது மீண்டுமொரு தாக்குதல் நடந்திருப்பது அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.