ட்வின் டவர் தாக்குதல்  கோப்பு படம்
உலகம்

இரட்டைக்கோபுர தாக்குதல் To பின்லேடன் கொலை | ’9/11’-க்கு பழிதீர்க்க அமெரிக்கா என்னவெல்லாம் செய்தது?

ட்வின் டவர் தாக்குதல் நடைபெற்று இன்றோடு 23 ஆண்டுகள் ஆனபோதும் இன்றளவில் அதன் தாக்கத்தால் அமெரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கல் கூறுகின்றன. இத்தாகுதலின் நினைவாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

சண்முகப் பிரியா . செ

செப்டம்பர் 11, 2001. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் வழக்கமான பரபரப்புடன் விடிந்திருந்தது அன்றைய நாள். வரப்போகும் பயங்கரத்தை அறியாமல் அமெரிக்காவின் தூங்காநகரமான நியூயார்க் தனக்கே உரிய பரபரப்புடன் இயங்கத் தொடங்கியிருந்தது. அங்குள்ள 110 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டடமும் அன்றைய பொருளாதார நிலையை நிர்ணயிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

என்ன நடந்தது என்று ஊகிப்பதற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!

சரியாக 8 மணி 26 நிமிடங்கள் இருக்கும். ட்வின் டவர் என்று அழைக்கப்படும் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கட்டடத்தை நோக்கி அதிபயங்கர வேகத்துடன் வந்த விமானம் ஒன்று, 93 மற்றும் 99வது மாடிகளுக்கு இடையில் மோதி வெடித்துச் சிதறியது. விமானம் ஏதோ விபத்துக்குள்ளாகியிருக்கிறது என எண்ணி, கீழே சாலைகளில் மக்கள் தெருக்களில் அஞ்சி ஓடத் தொடங்கிய அதே வேளையில் விபத்து நேர்ந்த கட்டிடத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் தீயில் கருகிக் கொண்டிருந்தனர்.

ட்வின் டவர் தாக்குதல்

சரியாக 18 நிமிடங்கள் கழித்து 9.03 மணியளவில், மற்றொரு விமானமொன்று வர்த்தக மையத்தின் தெற்கு கட்டிடத்தில் மோதி வெடித்தது. அப்போதுதான் இது தன்னிச்சையாக நடந்த விபத்து அல்ல பயங்கரவாதத் தாக்குதல் என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியது. அமெரிக்காவின் ஆளுமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டு கம்பீரமாக வானுயர நின்றுகொண்டிருந்த அந்த பிரம்மாண்டக் கட்டிடங்கள் கனப்பொழுதில் இடிந்து விழுந்தன. என்ன நடக்கிறது என தெரியாமல் மக்கள் திகைத்து கொண்டு இருக்கும் போதே அடுத்த தாக்குதல் அரங்கேறியது. ஆனால், இந்த முறை தாக்குதல் நடந்தது, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் மீது.

சுமார் 3000 பேரை பலிகொண்ட உலகின் மோசமான தாக்குதல்! 21-ம் நூற்றாண்டின் துயர அடையாளம்

இந்த தாக்குதலில் அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே உறைந்து போனது. இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடைபெறும் எனத் தெரியாமல் அமெரிக்கா திணறிக்கொண்டிருந்த நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே விழுந்து நொறுங்கியது அவ்விமானம். அவ்விமானத்தில் இருந்த பயணிகள் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டதால் கீழே விழுந்து நொருங்கியதாகக் கூறப்படிகிறது.

கட்டிடங்களிள் பணியாற்றியவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், என இந்த நான்கு தாக்குதலிலும் 2,977 பேர் உயிரிழந்தனர். இரட்டை கோபுரத்தில் 2606 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் மொத்தம் 125 பேர் கொல்லப்பட்டனர். மேலும் விமானங்களில் இருந்த 246 பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். இவர்களில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோரும் கிறித்தவம், இஸ்லாம், யூதம், இந்து, பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதத்தினரும், பெரும் செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர், லிஃப்ட் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அடங்குவர். 20-ம் நூற்றாண்டில் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் போல் 21-ம் நூற்றாண்டின் துயர அடையாளங்களுள் ஒன்றாக இரட்டைக் கோபுரத் தகர்ப்பு மாறியது.

இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது அல்கொய்தா அமைப்பு!

அமெரிக்க இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பு எது என்பதைத் தேடத் தொடங்கியது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது அல் கொய்தா. 19 அல்கய்தா பயங்கரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி நடத்திய தாக்குதல்தான் இது என்பது தெரியவந்தது. இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திவந்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிர்வினையாக ஒசாமா பின்லேடன் தலைமையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலகெங்கும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு அதிகமாக பரப்பப்பட்டது. ஆனால், அது பயங்கரவாதத்துக்கு எதிரானதாக மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராகவும் மாறியது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதாக அறிவித்தது அமெரிக்கா. அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபள்யு புஷ் அல் கய்தாவை அழிக்கவும் ஒசாமா பில் லேடனை பிடிக்கவும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார். இதற்காக சர்வதேச அளவில் கூட்டணியை உருவாக்கினார்.

தக்குதலின் இடிபாடுகள்

தாலிபன்கள் வசம் அடைக்கலம் புகுந்த ஒசாமா பின்லேடன்!

ட்வின் டவர் தாக்குதலுக்குக் காரணமான பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்திருந்தனர். இதனை அறிந்துகொண்ட அமெரிக்கா பின்லேடனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி தாலிபான்களிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், பின்லேடனை ஒப்படைக்க மறுத்தது தாலிபான். பிரிட்டன் கனடா மற்றும் நேட்டோ படைகளின் ஆதரவுடன் தாலிபான்களை விரட்டியடித்து ஆப்கானிஸ்தானை தன் வசப்படுத்தியது அமெரிக்கா. ஆனால் அஃப்கானிஸ்தான் முழுக்க சல்லடை போட்டு அலசியும் பின் லேடனைப் பிடிக்க முடியாமல் திணறியது அமெரிக்கப்படை.

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா-தூக்கிலிடப்பட்டார் சதாம் உசேன்!

பின் லேடனை பிடிக்க முடியாமல் போனதும் ஈராக் அதிபர் சதாம் உசேன் மீது பார்வையை திருப்பியது அமெரிக்கா. பேரழிவுக்கு வித்திடும் ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி 2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பிரிட்டனுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போ ஒரு ஈராக்கை கைப்பற்றியது அமெரிக்க பிரிட்டன் கூட்டுப்படை. டிசம்பர் 13 2003 அன்று சதாம் உசேன் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணைக்கு பிறகு டிசம்பர் 30 2006 அன்று சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

இரட்டைக்கோபுர தாக்குதல்.. கிளம்பிய சந்தேகங்கள்!

உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டாலும், விமான எரிபொருளால் இவ்வளவு பெரிய பேரழிவு எப்படி சாத்தியமாகும் ? எனக் கேள்வியெழுந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் எனக் கூறி அமெரிக்கா மறைமுகமான போரில் ஈடுபடுவதாக பலர் குற்றம்சாட்டத் தொடங்கினர். ட்வின் டவர் தாக்குதல் திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல் எனவும் இதில் அமெரிக்கர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. அமெரிக்கா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் அமெரிக்கா மீது விமர்சனமாக வைக்கப்பட்டன.

விமான வழி தாக்குதல் என்றால் மிக முக்கியமாக பார்க்கப்படுவது விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி. ஆனால் பின் டவர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட விமானங்களில் இருந்த கருப்பு பெட்டிகள் எரிந்து சாம்பலானதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. சுமார் மூன்றாயிரம் டிகிரி செல்சியஸ் ஆன யூர்மின் உருகுநிலை கொண்ட கருப்பு பெட்டி எப்படி சுமார் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருகியது என்ற கேள்விகள் என தொடங்கின.

யார் காரணம்? - ஐ.நா அமைப்பு மேற்கொண்ட விசாரணை!

ட்வின் டவர் தாக்குதலில் பல்வேறு சந்தேகங்கள் உலா வர 2002 ஆம் ஆண்டு இச்சம்பவம் குறித்த விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்தது ஐக்கிய நாடுகள் சபை. இரண்டு வருட விசாரணைக்கு பிறகு 2004 ஆம் ஆண்டு தனது அறிக்கையை அவ்வாணையம் வெளியிட்டது. அதில் உலக வர்த்தக மைய தாக்குதலில் ஈடுபட்டது அல்கொய்தா பயங்கரவாதிகள் தான் என உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

பின் லேடன்

ஸ்கெட்ச் போட்ட அமெரிக்கா - பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொலை!

பின்னர் தொடர்ந்து பின் லேடனைத் தேடி வந்தது அமெரிக்கா. அல்-குவைதாவின் நடமாட்டம் பாகிஸ்தானில் உள்ள அப்பாட்டாபாத்துக்கு அருகில் இருப்பதாக அமெரிக்கவுக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே பாகிஸ்தான் மீது அமெரிக்க புலனாய்வுத் துறை தனது கண்காணிப்பைத் திசை திருப்பியது. ஆப்பரேஷன் நெப்டியூன் இசுப்பியர் என்னும் பெயரில் தனிப்படை அமைத்து கண்காணிப்புக்குப் புலப்படாத அதிநவீன உலங்கு வானூர்திகள் மூலம் பில் லாடன் தங்கியிருந்த வீட்டைத் தாக்கிய அமெரிக்க ”நேவி சீல்” அதிரடிப்படையினர், மே 1, 2011 அன்று பின் லாடனை சுட்டுக் கொன்றனர். அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காலித் ஷேக் முகமது என்ற பயங்கரவாதியும் காரணம் எனக் கூறி அவரையும் கைது செய்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படை ஆப்கனிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கியது. எனினும், முழுமையாக வெளியேற 10 ஆண்டுகள் ஆயின.

ட்வின் டவர் தாக்குதல் நடைபெற்று இன்றோடு 23 ஆண்டுகள் ஆனபோதும் இன்றளவில் அதன் தாக்கத்தால் அமெரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கல் கூறுகின்றன. இத்தாகுதலின் நினைவாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது.