ஸ்பெயின் pt web
உலகம்

ஸ்பெயின்: 2 மாத மழை 8 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததன் தாக்கம்.. 205 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் பெருமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளம் பாதித்து 3 நாட்களாகியும் இயல்பு நிலை திரும்பாததால் ஸ்பெயின் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

PT WEB

மலைபோல் குவிந்துள்ள கார்கள், தண்டவாளங்களில் கவிழ்ந்து கிடக்கும் வாகனங்கள்.. வீடுகள், சாலைகளில் மண்டிய சகதி.. என வாலன்சியா மாகாணமே சுனாமி கண்டதுபோல இருக்கிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாலன்சியாவில் மட்டும் 202 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரை காணவில்லை என்றும், குவிந்து கிடக்கும் வாகனங்களில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

மண்டிக்கிடக்கும் கார்களால் பல வீதிகள் பாதையின்றி போக்குவரத்துக்கு வழியின்றி அடைபட்டுள்ளன. இன்னும் பலர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கிஉள்ளனர். இன்னும் பல பகுதிகளில் மின்சாரமில்லை, குடிநீர் விநியோகம் இல்லை, தொலைபேசி இணைப்பு சீராகவில்லை. இந்தச் சூழலை நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார்கள் வாலன்சியா மக்கள். உணவின்றி, தண்ணீரின்றி குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்டோர் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்ததன் விளைவை எதிர்கொள்ள முடியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் மக்கள். சாலைகளில் மண்டியுள்ள சகதிகளை அகற்றும் பணியில் மக்களே ஈடுபட்டு வருகிறார்கள். செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர், வாலன்சியாவை இயல்பு நிலைக்கு மீட்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆயிரத்து 100 மீட்புப்படையினர், வாலன்சியாவில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சியை சந்தித்து வந்த ஸ்பெயினுக்கு பெருமழை மகிழ்ச்சியைத் தராமல், அவர்களுடைய மேலும் மோசமாகியிருக்கிறது. சுனாமி போன்ற பாதிப்பை சந்தித்துவருவதாக கூறும் மக்கள், சேறு மூடிய பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.