உலகம்

“4 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு சூடானது பூமி” - ஐ.நா தகவல்

webteam

உலகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில்தான் அதிக வெப்பம் பதிவாகி இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உலக வெப்பநிலை பதிவு செய்யப்பட தொடங்கிய நாளிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில்தான் பூமி அதிகமாக வெப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டுதான் வெப்பநிலை உச்சகட்டத்தை தொட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலக வெப்பநிலை கடந்த 1880ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுவருகிறது. அப்போதிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டு முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு இரண்டாவது இடத்திலும், 2015 மூன்றாவது இடத்திலும், 2018 நான்காவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற காரணங்களினால் கடல் மற்றும் நிலப்பகுதிகளில் வெப்பநிலை உயர்ந்ததாகவும், பசுமை இல்லா வாயுக்கள் அதிகளவில் வெளியாவ‌தன் எதிரொலியாகவே வெப்பம் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸுக்கு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

உலக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் கடுமையான வறட்சி, கடல்மட்டம் அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல், வெள்ளம், காட்டுத் தீ போன்ற பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதேபோன்று அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக வேகமாக உருகி வருவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பிரச்னையே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.