உலகம்

பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதி விபத்து: 30 பேர் பலி; 50 பேர் படுகாயம்

Veeramani

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதியதில் 30 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கி என்ற நகரத்திற்கு அருகே கராச்சியில் இருந்து சர்கோதா செல்லும் வழியில் மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு, லாகூரிலிருந்து கராச்சி செல்லும் சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த பயங்கரவிபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக கோட்கி, தர்கி, ஒபாரோ மற்றும் மிர்பூர் மாதெலோ ஆகிய மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 13 முதல் 14 பெட்டிகள் தடம் புரண்டன, ஆறு முதல் எட்டு பெட்டிகள் வரை முற்றிலுமாக சிதைந்தன. ரோஹ்ரியிலிருந்து ஒரு நிவாரண ரயில் புறப்பட்டுள்ளது, ரயிலில் சிக்கிய மக்களை விடுவிக்க மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.