உலகம்

பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

JustinDurai

பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட இருவரும் அப்பகுதியில் கடைகள் வைத்திருந்த சல்ஜீத் சிங் (42), ரஞ்ஜீத் சிங் (38) என்பது தெரியவந்தது.

கொலை நடந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்லாமிய தேச கோரசான் பிரிவு (ஐஎஸ்கேபி) பொறுப்பேற்றுள்ளது. இந்தப் பிரிவு ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் அமைப்பை சோ்ந்தது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மாகாண முதல்வர் மஹ்மூத் கான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, ஒரு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர்  தெரிவித்தார்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல. மேலும் இது அரிதான நிகழ்வு அல்ல. இது ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் வருந்தத்தக்க சம்பவம்" எனத் தெரிவித்துள்ளது.

பெஷாவர் நகரில் சிறுபான்மை சமூகத்தினராக உள்ள  சீக்கியர்கள், இந்துக்கள், அது சார்ந்த அமைப்புகள், மத வழிபாட்டு தலங்கள்  மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  .

இதையும் படிக்கலாம்: அமெரிக்கா: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் உயிரிழப்பு