ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு இன்று தொடங்குகிறது. இந்தியா, சீனா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதால் இந்த உச்சிமாநாடு, தற்போதைய சர்வதேச சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கஸன் (Kazan) நகரில் BRICS நாடுகளின் உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Brazil, Russia, India, China மற்றும் தென்ஆப்பிரிக்கா எனத் தொடங்கிய இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு, கடந்த ஜனவரி முதல் மேலும் பல உறுப்பு நாடுகளுடன் விரிவாகி இருக்கிறது.
Iran, Egypt, Ethiopia, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பிரிக்ஸ் அமைப்பு விரிவாகி உள்ள நிலையில், Turkiye, Azerbaijan, Malaysia ஆகிய நாடுகளும் உறுப்பினராக சேர விண்ணப்பித்துள்ளன. இதனை பிரிக்சின் முக்கிய வெற்றியாக ரஷ்யா பார்க்கிறது. கசனில், அக்டோபர் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் 32 நாடுகள் பங்கேற்க உள்ளதாகவும், 20-க்கும் அதிகமான நாடுகள் தங்கள் நாடுகளின் தலைவர்களை அனுப்புவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைன் போர், புதினுக்கு எதிரான சர்வதேச கைது வாரண்ட் ஆகியவற்றுக்கு மத்தியில் கூடும் இந்த உச்சிமாநாட்டில், பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 20 நாட்டு தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்த உள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில் தனக்கான ஆதரவை திரட்டும் முயற்சியாக ரஷ்யாவுக்கு இந்த உச்சிமாநாடு அமைகிறது.
போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களுக்கு தீர்வு காணும் முயற்சியாகவும் அமைகிறது. பிரிக்சின் முக்கிய நாடுகளான இந்தியா, சீனாவுடனான உறவை வலுப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாகவும் ரஷ்யா பார்க்கிறது. மற்ற நாடுகள், பரஸ்பர உறவை வலுப்படுத்திக்கொள்வதோடு தங்கள் குரலையும், கருத்தையும் வெளிப்படுத்துவதற்கான தளமாக இந்த உச்சிமாநாடு பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்தும் நேரத்தில், மோடி-புதின் சந்திப்பு முக்கியமானதாக இருக்கிறது. சீனாவுடன் உரசல் போக்கு இருந்தாலும், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய், அணுசக்தி, விண்வெளித்திட்டங்களில் இந்தியா இணைந்து செயல்படுவதால், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம்தான் பிரதமர் மோடி ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்தித்திருந்தார். அடுத்து ஆகஸ்ட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர், செப்டம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். தற்போது மீண்டும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி பிரதமர் மோடி, விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளார்.