உலகம்

மீண்டும் எல்லைத் தாண்டி மீன் பிடித்தால்... நிபந்தனைகளுடன் 15 தமிழக மீனவர்கள் விடுதலை

மீண்டும் எல்லைத் தாண்டி மீன் பிடித்தால்... நிபந்தனைகளுடன் 15 தமிழக மீனவர்கள் விடுதலை

webteam

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது எல்லைதண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட அந்தோணி,ஜாய்சன், நம்பு, காளிமுத்து, எஸ்ரா மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மாணவர் ரபிட்சன் உள்ளிட்ட 15 பேரை கச்சத்தீவுக்கும் தனூஷ்கோடிக்கும் இடையே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், 11 நாட்களாக சிறையில் அவதிப்பட்ட மீனவர்களின் வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு வந்தது அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நிரஞ்சனி முரளிதரன் மீனவர்களிடம் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்தார்.

இதைத் தொடர்ந்து இனி இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் நீண்டகால சிறை தண்டனை அதாவது இரண்டு அல்லது மூன்று வருடகால சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு மூன்று தினங்களுக்குள் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கர்ள் என இந்தியாவிற்கான துணைத் தூதரக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.