உலகம்

நேபாளத்தில் கடும் மழையால் நிலச்சரிவு - 14 பேர் உயிரிழப்பு; 10 பேர் மாயம்

நேபாளத்தில் கடும் மழையால் நிலச்சரிவு - 14 பேர் உயிரிழப்பு; 10 பேர் மாயம்

Sinekadhara

நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மலைப்பிரதேசமான நேபாளத்தில் மழைக்காலங்களில், குறிப்பாக ஜூன் - செப்டம்பர் மாதங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தொடர் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டிலிருந்து மேற்கே 450 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அச்சாம் மாவட்டம். இங்கு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 வீடுகள் அடியோடு சரிந்து விழுந்தன. அதில் வீட்டுக்குள் இருந்தவர்கள் அடியில் புதைப்பட்டனர்.

இதுகுறித்து உள்ளூர் மீடியாக்கள் வெளியிட்டுள்ள வீடியோக்களில், மீட்புப்பணியாளர்கள் புதைந்தவர்களை உயிருடன் மீட்கவேண்டுமென தங்கள் கைகளாலேயே வேகவேகமாக மண்ணை தள்ளும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. இருப்பினும், இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் நேபாளத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன.