எண்ணெய்க் கப்பல் எக்ஸ் தளம்
உலகம்

ஓமன் கடல் பகுதியில் கவிழ்ந்த எண்ணெய்க் கப்பல்.. 13 இந்தியர்கள் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்!

Prakash J

ஓமன் நாட்டின் கடல் பகுதியில், கொமரோஸ் நாட்டுக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணிபுரிந்த 16 பேரை காணவில்லை என்றும் ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

எண்ணெய்க் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பணியில், இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் (INS Teg) மற்றும் P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் என 16 பேரின் நிலை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி கொமரோஸ் கொடியுடன் இந்திய பணியாளர்கள் உட்பட 14 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து இஸ்தான்புல்லுக்கு உப்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்த ராப்டார் சரக்குக் கப்பல், லெஸ்போஸின் தென்மேற்கே 4.5 கடல் மைல் (8.3 கிமீ) தொலைவில் சென்று கொண்டிருந்த போது அதிவேகக் காற்றின் காரணமாக கிரேக்கத்தின் லெஸ்போஸ் தீவின் கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிராங்கால் ஏற்பட்ட விபரீத விளைவு.. மும்பை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!