உலக அளவில் 115 மில்லியன் ஆண்கள் சிறுவர்களாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டவர்கள் என யுனிசெஃப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது
யுனிசெஃப் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை திருமணம் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் உலக அளவில் 115 மில்லியன் ஆண்கள் சிறுவர்களாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டவர்கள் என தெரிவித்துள்ளது. அதில் 23 மில்லியன் சிறுவர்கள் 15வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
82 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தகவலின் படி இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரத்தின் படி மத்திய ஆப்ரிக்காவில் 28 சதவிகிதமும், மத்திய அமெரிக்காவின் நிகராகுவா நாட்டில் 19 சதவிகிதமும், கிழக்கு ஆப்ரிக்காவின் மடகஸ்கார் நாட்டில் 13 சதவிகித ஆண்களும் சிறுவர்களாக திருமணம் முடித்தவர்கள்.
அதேபோல் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 5ல் ஒருவர் 18 வயதுக்கு முன்னதாகவே திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த யுனிசெபின் நிர்வாக இயக்குநர் ஹென்ரியட்டா, ''சிறுவர்கள் மனதளவில் தயாராகாத நிலையிலேயே திருமண பந்தத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். சிறு வயது திருமணம் அவர்களை சிறு வயதிலே தந்தையாக மாற்றிவிடுகிறது. இதனால் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்கள் குடும்ப அழுத்தத்தில் சிக்குகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.