உலகம்

இந்த நாடுகளில் எல்லாம் ராணுவப் பயிற்சி கட்டாயம்!

இந்த நாடுகளில் எல்லாம் ராணுவப் பயிற்சி கட்டாயம்!

ஜா. ஜாக்சன் சிங்

இந்தியாவில் 4 ஆண்டுக்கால ராணுவப் பணியில் சேரும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சி அமலில் இருக்கிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

1. ரஷ்யா

ஒன்றுப்பட்ட சோவியத் யூனியன் உருவானது முதலாகவே (சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே) அமல்படுத்தப்பட்ட கட்டாய ராணுவப் பயிற்சியை இன்றளவும் ரஷ்யா கடைப்பிடித்து வருகிறது. ரஷ்யாவில் 18 முதல் 27 வயது வரை இருக்கும் ஆண்கள்12 மாதக்கால ராணுவப் பயிற்சியில் கட்டாயம் சேர வேண்டும். ராணுவப் பழக்கவழக்கத்துக்கு முரணான கொள்கைகளை கொண்ட ஒரு சில இனக்குழுக்களுக்கு மட்டுமே இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ராணுவப் பயிற்சியில் சேரவில்லை என்றால் பெரும் தொகை அபராதமாகவும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ரஷ்யாவில் இதுபோன்ற கட்டாய ராணுவப் பயிற்சியில் சேருபவர்களை அங்குள்ள நிரந்தர ராணுவ வீரர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்குவதாக காலம் காலமாக புகார்கள் உள்ளன. எனினும், இதுதொடர்பாக ரஷ்ய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2, 3. வட மற்றும் தென் கொரிய நாடுகள்

வட கொரியா, தென் கொரியா நாடுகள் இடையே கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. அவ்வப்போது எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் சம்பவங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் இரண்டு நாடுகளும் தங்கள் ராணுவ வலிமையை அதிகரிப்பதில் கடந்த அரை நூற்றாண்டாகவே தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி, வட கொரியாவில் கட்டாய ராணுவப் பயிற்சி திட்டம் நீண்டகாலமாக அமலில் உள்ளது. அங்கு பள்ளிப் படிப்பை முடிக்கும் 17 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் ராணுவத்தில் கட்டாயம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். அங்கு பெண்கள் கட்டாய ராணுவப் பயிற்சியில் சேருவது என்பது ஒரு தேர்வாக இருந்தது. ஆனால், 2015-ம் ஆண்டுக்கு பிறகு பெண்களுக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தென் கொரியாவை பொறுத்தவரை, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெற வேண்டும். ராணுவத்தில் சேர விருப்பமில்லாதவர்கள் காவல்துறை, தீயணைப்புப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றில் இணைந்து பயிற்சி பெறலாம். விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் ஆகியோருக்கு கட்டாய ராணுவப் பயிற்சியில் சேருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

4. இஸ்ரேல்

போர் பதற்றம் நிறைந்த இஸ்ரேல் நாட்டில் 1949-ம் ஆண்டு முதலாக கட்டாய ராணுவப் பயிற்சி அமலில் உள்ளது. 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் இருபாலரும் ராணுவத்தில் கட்டாயம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். ஆண்கள் இரண்டரை வருடமும், பெண்களுக்கு இரண்டு வருடமும் ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும். அரபிய இஸ்ரேலியர்கள், மதச் சடங்குகளில் ஈடுபடும் பெண்கள், பலவீனமானவர்கள் ஆகியோருக்கு மட்டுமே கட்டாய ராணுவப் பயிற்சியில் சேர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

5. பிரேசில்

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு வருடம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விருப்பப்படுபவர்கள் 8 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம்.

கட்டாய ராணுவப் பயிற்சியில் சேர மறுப்பவர்கள் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. தேர்தலில் வாக்களிக்க முடியாது. தேர்தலில் போட்டியிட முடியாது.

6. ஈரான்

ஈரான் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் கட்டாயம் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும். 18 முதல் 24 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். கட்டாய ராணுவப் பயிற்சியில் சேராதவர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படும். உதாரணமாக, அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. அரசுப் பணிகளில் சேர முடியாது. வாக்குரிமை ரத்து செய்யப்படும்.

7. துருக்கி நாட்டிலும் 20 முதல் 41 வயது வரை உள்ள ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. முதலில் ஓராண்டு காலம் இருந்த இந்த ராணுவப் பயிற்சி 2019-ம் ஆண்டு முதல் 6 மாதங்களாக குறைக்கப்பட்டு விட்டது. மேற்படிப்பு அல்லது தொழிற்படிப்பு மேற்கொள்பவர்கள் காலத்தாமதமாக ராணுவப் பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். கட்டாய ராணுவப் பயிற்சியில் வெளிநாடுகளில் உள்ளவர்களை தவிர அங்கு வேறு யாருக்கும் விதிவிலக்கு கிடையாது.

இதேபோல, 8. க்யூபா 9. சுவிட்சர்லாந்து 10. எரிட்ரியா 11. ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும் கட்டாய ராணுவப் பயிற்சி அமலில் உள்ளது.