உலகம்

கொரோனா மருந்து கண்டுபிடிப்பதற்காக 103 வயதில் மாரத்தான் செல்லும் மருத்துவர்..!

கொரோனா மருந்து கண்டுபிடிப்பதற்காக 103 வயதில் மாரத்தான் செல்லும் மருத்துவர்..!

webteam

பெல்ஜியத்தில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் குழுவிற்கு நிதி திரட்ட 103 வயது மருத்துவர் மாரத்தான் சென்றுகொண்டிருக்கிறார்.

உலக அளவில் இதுவரை 74,77,996 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 37,92,036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,19,382 பேர் உயிரிழந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தக் கொடிய கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் 103 வயது மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்கும் மருத்துவக் குழுவிற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்யும் வகையில், மாரத்தான் சென்று நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். அல்ஃபோன்ஸ் லீம்போயல்ஸ் என்ற அந்த மருத்துவர் தனது வீட்டின் தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 42.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று மாரத்தான் போட்டியில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி தனது மாரத்தான் பயணத்தைத் தொடங்கிய அவர், ஜூன் 30ஆம் தேதி அதனை முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று முறை நடக்கிறார். இதுவரை அவர் 6,000 யூரோக்களை சேர்த்திருக்கிறார். இது இந்திய மதிப்பில் ரூ.5,16,600 ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது பழம்பெரும் நபரான டாம் முர்ரே, 100 வயதில் மாரத்தானில் ஈடுபட்டு நிதி திரட்டியதைப் போல தானும் மக்களுக்காக நிதி திரட்டுவதாக அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.