உலகம்

நீச்சல்குளத்தில் வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்த தாய் - 10 வயது மகன் செய்த அபார செயல்!

Sinekadhara

வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு வந்து அவதிப்பட்ட தாயின் உயிரை காப்பாற்றியுள்ளான் 10 வயது சிறுவன்.

அமெரிக்காவிலுள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கீனி என்ற பெண்ணின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் குளத்திற்குள் இருந்த தாயாருக்கு வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருக்கிறார். அதனை பார்த்த சிறுவன் உடனடியாக நீச்சல் குளத்திற்குள் குதித்து தாயாரை கரைக்கு இழுத்துவருகிறார். உள்ளே குதிக்க வழியை எதிர்பார்த்து குளத்தின் படிக்கெட்டுகளில் அவர்களுடைய நாயும் காத்திருக்கிறது.

இதுகுறித்த பதிவு ஒன்றை ஆகஸ்ட் 6ஆம் தேதி அந்த பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லோரி கீனி. அந்த பெண்ணின் மகன் பெயர் காவின். தனது உயிரை காப்பாற்றியதற்காக தனது மகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீனி. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

’’உங்களுடைய மகன் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு தூதன். என்ன ஒரு அற்புதமான இளைஞன். அவர் ஒரு உண்மையான ஹீரோ’’, ‘’கடவுள் ஆசீர்வதிப்பாராக காவின். உனது தாயின் தேவதூதன் நீ’’ என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கீனி கூறுகையில், ‘’காலை நேரத்தில் களிப்பதற்காக நானும் காவினும் நீச்சலடிக்க சென்றோம். காவின் கரைக்கு சென்றபிறகு நானும் வெளியே செல்லவிருந்தேன். அப்போது திடீரென எனக்கு வலிப்பு வந்துவிட்டது. நான் பொதுவாக பயப்படுவதைவிட அன்று மிகவும் அதிகமாக பயந்துவிட்டேன்’’ என்று கூறியுள்ளார். தானும் கொஞ்சம் பயந்துவிட்டதாக கூறியுள்ளார் காவின். தனது துணிச்சலான செயலுக்காக காவின் கிங்கஸ்டன் காவலர்களிடமிருந்து விருதையும் பெற்றுள்ளான்.