செல்வக்கண்ணன்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஒரு நாட்டிற்கும் - ஆயுதம் ஏந்திய படைக்குமான இந்த போரினால் நிகழ்ந்த விளைவுகள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஏராளமான ஏவுகணைகள் தாக்கின. உலகம் போற்றிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பான அயன் டோமை தாண்டியும் ஏவுகணை இஸ்ரேல் நிலப்பரப்பை தாக்கின. இந்த நிகழ்வுதான் தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்திற்கு காரணம். பாலஸ்தீன ஆதரவு படையான ஹமாஸ் நடத்திய ஏவுகணை மற்றும் தரைவழித் தாக்குதலில், இஸ்ரேலின் 1200 நபர்கள் கொல்லப்பட்டனர்.
250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் படையினர். அன்றைய தினமே பிணைக் கைதிகளை மீட்கவும், பழிக்கு பழி வாங்கும் நோக்கில் காசாவில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. வான் வழியாகவும், தரை வழியாகவும் காசாவில் ஊடுருவிய இஸ்ரேல் படையினர், மருத்துவமனைகளை குறிவைத்தே அதிக தாக்குதலை நடத்தினர்.
இதன் காரணமாக, படுகாயம் அடைந்தோருக்கு கூட சிகிச்சை அளிக்க முடியாமல், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தன. அதேநேரத்தில் இஸ்ரேல் படையினரும் காசாவில் முன்னேறி வந்தனர். ஹமாஸின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் பல்லாயிரம் அப்பாவி மக்களும் போரில் மாண்டனர். இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 41 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
வானுயர்ந்து நின்ற கட்டடங்கள் தரைமட்டமானதால், 23 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர். முகாம்கள் அமைத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள், மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தாலும் போதுமானதாக இல்லை என்பதே அங்குள்ள களநிலரமாக உள்ளது. இத்தனை துயரங்களை தாங்கி ஓராண்டாக போர் தொடர்ந்து வருகிறது.
போரினை நிறுத்த உலக நாடுகள் நடத்தி பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்விலேயே முடிந்தன. மாறாக லெபனான், சிரியா, ஏமன் வரையும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதப்படையினரை நோக்கி வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் கடந்த சில வாரங்களாக நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேலை நோக்கி ஈரான் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியது மத்திய கிழக்கு நாடுகளில் பற்றி எரிந்த போர் பதற்றத்தில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியுள்ளது. இப்படியான சூழலில், ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடுத்த போர் ஓராண்டை எட்டியபோதும், போர் நிறுத்தத்திற்கான எந்த அறிகுறியும் தென்ப்படவில்லை. இதனிடையே, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதலும் மத்திய கிழக்கு நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை உயர்த்தியுள்ளது.