உலகம்

’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை!

’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை!

webteam

அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று, அமெரிக்க இரட்டை கோபுரம், அல்கொய்தா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அங்கு கடைபிடிக்கப் பட்டது. அன்று, அங்குள்ள டென்னஸி மாகாணத்தில் உள்ள ஜெர்மன் டவுனில் உள்ள மெத்தோடிஸ்ட் லெபானஹெர் மருத்துவமனையில், கேமர்டிஒன் மூர் பிரவுன் என்ற பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தையை அற்புதக் குழந்தை என்கிறார் பிரவுன். காரணம் அந்தக் குழந்தை, 9 வது மாதம் 11 வது நாள், இரவு 9 மணி 11 நிமிடத்தில், 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் பிறந்துள்ளது என்பதுதான்! ‘இவள் அற்புத குழந்தை. பேரழிவு மற்றும் அழிவுக்கு மத்தியில் இவள் புதிய வாழ்வாக அமைந்துள்ளாள்’ என்கிறார் மூர் பிரவுன்.

குழந்தையின் தந்தை ஜஸ்டின் கூறும்போது, ‘’சோகமான தினத்தில், இந்த செய்தியை கேட்டதும் உற்சாகமடைந்தேன்’’ என்றார். குழந்தைக்கு கிறிஸ்டினா என்று பெயர் வைத்துள்ளனர்.