உலகம்

“துருக்கியில் கட்டடங்கள் இடிந்துவிழ அரசியல்வாதிகளே காரணம்”-விஞ்ஞானிகள் பகீர் குற்றச்சாட்டு

“துருக்கியில் கட்டடங்கள் இடிந்துவிழ அரசியல்வாதிகளே காரணம்”-விஞ்ஞானிகள் பகீர் குற்றச்சாட்டு

PT

கடந்த மாதம் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கு அரசியல்வாதிகளே காரணம் என விஞ்ஞானி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

துருக்கியில் கடந்த மாதம் பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஆண்டக்யா நகரமானது பெரும் அழிவை சந்தித்தது. இதனை துருக்கி அரசின் வான்வழிப் படங்கள் உறுதி செய்தன. அப்போது நிலநடுக்கத்தால் நகரின் மீதமுள்ள 80 சதவீத கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த மேயர் லுட்ஃபு சாவாஸ், “ஆண்டக்யாவில் இடிந்து விழுந்த சுமார் 3,100 கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்தார்.

நிலநடுக்கம் தீவிரமானதாக இருந்தது.. எந்த கட்டிடத்தையும் வலுவிழந்ததாக மாற்றும் விதமாக பதிவானது!

ஆண்டக்யாவின் ஆசி ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டடங்கள் 20-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். மோசமான வடிவமைப்பு, ஆற்றின் மண்பரப்பில் கட்டப்பட்டது உள்ளிட்ட பல காரணிகளால் தான், நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் மிகவும் பாதிப்படைந்ததாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் போகாசிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மற்ற நகரங்களை விட ஆண்டக்யாவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நன்றாக கட்டப்பட்ட கட்டடங்களைக் கூட சேதப்படுத்தும் அளவுக்கு தீவிரமானது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இதுகுறித்து பல நகரங்களில் நிலநடுக்க சேதத்தை ஆய்வு செய்த அப்ளைடு டெக்னாலஜி கவுன்சிலின் திட்ட இயக்குனர் அய்ஸ் ஹோர்டாக்சு பேசுகையில், "கடந்த 1998-ம் ஆண்டு துருக்கியின் நில அதிர்வு குறியீட்டை நவீனமயமாக்குவதற்கும், சீர்திருத்துவதற்கும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆண்டக்யாவின் பல கட்டடங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பே கட்டப்பட்டன. பாதுகாப்பற்றதாக கருதப்பட்ட சில புதிய கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ளன. இந்த சம்பவம் தரமற்ற கட்டுமான நடைமுறைகளின் ஆபத்தை கவனத்தில் கொள்ள வேண்டியதை உணர்த்தியுள்ளது” என்றார்.

இந்த கட்டடங்கள் விழவே விழாது என விற்பனை செய்யப்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின!

கடந்த 2019-ம் ஆண்டில் “மிகவும் வலுவானது” என ஆரவாரத்துடன் திறக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வளாகமானது, அதன் கட்டுமானத் தரத்திற்காக மக்களிடையே சந்தைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் அப்போதைய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் ஐந்தில், நான்கு கட்டடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தன. முதலாவதாக பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும், பின்னர் பிப்ரவரி 20-ஆம் தேதி ஏற்பட்ட சிறிய நிலநடுக்கத்தின்போது இரண்டு கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

முந்தைய சிறிய நிலநடுக்கங்களால் சேதமடைந்த பல கட்டடங்கள் சரியாக பலப்படுத்தப்படவில்லை. ஆழமற்ற அஸ்திவாரங்கள், தரைத்தள சில்லறை விற்பனை, அதிக அடுக்கு மாடித் திட்டங்கள் உள்ளிட்டவை கட்டடங்களை பாதிப்புக்குள்ளாக்கியது. அத்துடன் வலுவான கட்டடங்களைக் கூட கடுமையாக சேதப்படுத்தும் அளவுக்கு நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆண்டக்யாவில் கி.மு 300-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பண்டைய வர்த்தக மைய பகுதி அமைந்திருந்தது. இதில் நிரம்பியிருந்த பழமையான மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயம் ஆகியவை பரவலான அழிவைச் சந்தித்துள்ளன. வரலாற்று கட்டடங்களின் உயரம் குறைவாக இருப்பதால், எப்போதும் வான்வழிப் படங்களின் மூலம் சேதத்தை தெளிவாக அறிய முடியாது. ஆனால், ஆழமான விரிசல்களின் காரணமாக சேதத்தை தாங்கி நிற்கும் கட்டடங்களில் பலவற்றை இடிக்க வேண்டியிருக்கும்.

மென்மையான மண்ணின் மேற்பரப்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன!

இதுகுறித்து கிழக்கு மத்திய தரைக்கடல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணை பேராசிரியர் மெஹ்மெட் செமல் ஜீன்ஸ் பேசுகையில், “ஆற்றின் அருகே உள்ள மணல்பரப்பு முழுவதும் வண்டல் வகையைச் சேர்ந்தது. இந்த மென்மையான மண் பரப்பின் மீதே சேதமடைந்த கட்டடங்கள் கட்டியெழுப்பப்பட்டது. மென்மையான மண் நிலநடுக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அதிகரித்து, பெரிய சேதத்துக்கு வழிவகுத்துள்ளது. ஜூலை 15-ஆம் தேதி பூங்காவிற்கும், ஆற்றுக்கும் இடையில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தற்போது உயிர் பிழைத்தவர்களின் தங்கும் கூடாரங்கள் பூங்காவை நிரப்பியுள்ளன. இந்த அழிவானது விஞ்ஞானிகளின் கூற்றுக்கு செவிசாய்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தால் ஆண்டக்யாவுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை ஆய்வு செய்த குழுவில் இடம் பெற்றிருந்தேன்.

அப்போது பல கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் கூறியதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் எப்போதுமே அரசியல் ஆதரவை எப்படிப் பெறுவது என்றே யோசித்தனர். குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக, மிக மோசமான மண் பரப்பிலும் 10 மாடிக்கும் மேற்பட்ட கட்டடங்களை கட்ட அனுமதித்தனர். இதனால் முன்னரே பாதிக்கப்படக்கூடியவை என்று மதிப்பிடப்பட்ட பல கட்டடங்கள் நில நடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகி உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்றார்.

துருக்கி அரசியல்வாதிகளின் சுயநலமே, பெரும் உயிரிழப்புக்கு காரணம் எனும் விஞ்ஞானியின் குற்றச்சாட்டு உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனால் பிற நாடுகளும் பேரழிவு சமயங்களை எதிர்கொள்ளத் தேவையான காரணிகளை சுயபரிசோதனை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

- ராஜா