உலகம்

மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாத தலைவர் விடுவிப்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாத தலைவர் விடுவிப்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

webteam

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் ஈ தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சையதை லாகூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

2008ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை லஷ்கர் ஈ தொய்பா எனும் அமைப்பு நடத்தியது. லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சையத் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் படி கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 10 மாதங்களுக்கு அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவரது காவல் இன்றோடு முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் அரசு லாகூர் நீதிமன்றத்தில் அவரின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்த மனுவை லாகூர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஹபீஸ் விடுதலையாகியுள்ளார். பாகிஸ்தான் அரசும் பஞ்சாப் மாகாண அரசும் சையத் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இது பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்கறையின்மையைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார். தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் தனது கொள்கையை பாகிஸ்தான் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்றும் ஹபீசின் விடுவிப்பு பாகிஸ்தானின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது என்றும் குமார் கூறியுள்ளார். 

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஐநா சபையும் அமெரிக்காவும் ஹபீசை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.