சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட செய்தி, அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஒரு சதவிகிதம் அளவுக்கே இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் ஆப்கானிஸ்தான், லிபியா, சினாய் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அவர்களது ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட செய்தி அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், கடந்த இரு ஆண்டுகளாக அமெரிக்காவும், அதன் கூட்டுப் படைகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்து நடத்தியதாக கூறினார்.
அத்துடன் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட நிலங்களை மீட்டிருப்பதாக தெரிவித்தார். மோசூல், ரக்கா போன்ற நகரங்கள் ஐஎஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அமைப்பின் நூற்றுக்கணக்கான தலைவர்களும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.