உலகம்

‘ஆல் இஸ் வெல்’ - ஈரான் தாக்குதல் குறித்து ட்ரம்ப் ட்வீட்

‘ஆல் இஸ் வெல்’ - ஈரான் தாக்குதல் குறித்து ட்ரம்ப் ட்வீட்

rajakannan

அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஆல் இஸ் வெல் என அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானில் ஒரு ஹீரோவைப் போல போற்றப்படும் சுலைமானி கொல்லப்பட்டது அந்நாட்டு அரசினை கோபத்தில் ஆழ்த்தியது. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இதனையடுத்து, ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது நேற்று ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஒரு டஜன் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அயின் அல் அஷாத் தளத்தில் உள்ள விமானப்படை முகாம்களில் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. சுலைமானி கொலைக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் படைகள் ஏற்கனவே ஒரு முறை தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து, ஆல் இஸ் வெல் என அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். “2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் சேதம் குறித்து ஆராயும் பணி நடக்கிறது. இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்திருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த, நவீன ஆயுதங்கள் எங்களிடம்தான் இருக்கின்றன. நாளை காலை அறிக்கை வெளியிடுகிறேன்” என ட்ரம்ப் தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.