உலகம்

பாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி

rajakannan

ஆசியா பீபியை விடுதலை செய்து தீர்ப்பளித்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், சிறையில் இருந்து இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.

ஆசியா பீபி (வயது 47) என்ற கிறிஸ்துவ பெண், இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் ஆசியா பீபி மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆசியா பீபி 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இதனை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீவியை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விடுதலை செய்யப்பட்டு ஆசியா பீவி வெளியே வந்தார் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்பட்டது. அதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தரப்பில் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ஆசியா பீபி இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து, பஞ்சாப் மாகாண சிறைத்துறை அமைச்சர் ஹுசைன் கூறுகையில், “ஆசியா பீபி முல்தான் சிறையில் இருக்கிறார். அவர் இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவை நாங்கள் இன்னும் பெறவில்லை. வழக்கமாக தீர்ப்பு வெளியான இரண்டு தினங்களில் விடுதலைக்கான உத்தரவை நாங்கள் பெற்றுவிடுவோம். குற்றவாளியின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் சுறுசுறுப்பாக இருந்தால் ஒரே நாளில் உத்தரவு எங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், ஆசியா பீபி விவகாரத்தில் அது நடக்கவில்லை. உத்தரவு இன்னும் வரவில்லை” என்றார். 

இதனிடையே, ஆசியா பீபியின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கின்றனர். “என்னுடைய  மனைவியை விடுதலை செய்யாமல் தாமப்படுத்தப்படுவது, 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய மகள்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தங்களுடைய தாயை பார்க்கவில்லை” என்று கூறுகிறார் ஆசியா பீபியின் கணவர் மணிஷ்.

பீபியின் கணவர் மணிஷ் தன்னுடைய குடும்பத்தை பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்களுடைய குடும்பம் நாட்டை விட்டு வெளியேற உதவி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.