லண்டன் பேருந்தில் வந்த தன்பால் ஈர்ப்பாளர் இருவரிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெலெனியா கெய்மொனாட் என்ற பெண் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவரும் அவரது தோழி க்ரிஷ் என்பவரும் தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் கூடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
மேலும், “நானும் எனது தோழியும் இரவு வேளையில் பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது முத்தமிட்டு கொண்டோம். அப்போது பேருந்தில் வந்த நான்கு இளைஞர்கள் எங்களிடம் முத்தம் வேண்டும் என்று கேட்டனர். ஆனால் நாங்கள் கொடுக்க மறுத்துவிட்டோம். உடனே அவர்கள் எங்களை அசிங்கமாக திட்டினார்கள். லெஸ்பியன் என அழைத்தார்கள். எங்களுக்குப் பல தொந்தரவுகளை கொடுத்தார்கள். எங்கள் மீது சில்லரைகளை எறிந்தார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த என் தோழி அவர்களுடன் சண்டையிட்டாள். அவர்கள் அவளை கடுமையாக தாக்கினார்கள். பிறகு என்னையும் தாக்கினார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முத்தம் கேட்டு தொந்தரவு செய்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்தச் சம்பவம் மே 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்களை கைது செய்துள்ளோம். இளைஞர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் முன்பு பெண்கள் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், பை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வயதிலிருந்து 18 வரையிலுள்ள நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து துப்பறியும் கண்காணிப்பாளர் ஆண்டி காச் கூறுகையில் “சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிந்தோம். மேலும் யாராவது இந்தச் சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
பிரிட்டீஷ் பிரதமர் தெரேசா மேயும் இந்தச் சம்பவத்திற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது வேதனை தரும் தாக்குதல் எனவும் எவரும் ஒருபோதும் தாங்கள் யார் என்பதையும் தாங்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பதை மறைக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார். தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்காக பாடுபடவேண்டும் என தெரேசா மே கேட்டுக்கொண்டுள்ளார்.