பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசு, ட்விட்டரில் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.
இதன் தொடக்கம், நேற்றைய தினம் செர்பியாவின் பாகிஸ்தான் தூதரக ட்விட்டர் பதிவுதான். அப்பதிவில், “நாட்டில் பணவீக்கம் உச்சநிலையை தொட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களாகிய நாங்கள் கடந்த மூன்று மாதமாக சம்பளமின்றி வேலை பார்த்து வருகிறோம். அதனால் எங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைகூட எங்களால் செலுத்த முடியவில்லை.
பள்ளிக்கட்டணம் செலுத்தபடாத காரணத்தால், எங்கள் பிள்ளைகள் பள்ளிகளால் வெளியே அனுப்பப்படுகின்றனர். இன்னும் எவ்வளவு மாதங்களுக்கு நாங்கள் உங்களிடம் சம்பளம் பெறாமல் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் இம்ரான் கான்? கட்டணம். இதுதான் புதிய பாகிஸ்தானா?” என்று பதிவிடப்பட்டிருந்தது.
இத்துடன், பாகிஸ்தான் பிரதமரை பகடி செய்யும் விதமாக மியூசிக் வீடியோவொன்றும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டின் பின்னூட்டமாக “மன்னிக்கவும் இம்ரான் கான். எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்றும் மற்றொரு ட்வீட்டும் போடப்பட்டிருந்தது.
இவையாவும் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் இவற்றுக்கு எதிர்விணை காட்டத்தொடங்கின. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தூதரகம் சார்பில் அந்தப்பதிவுகள் நீக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‘செர்பியாவை சேர்ந்த எங்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் யாரோலோ ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இதிலிருந்து பதிவானவை எதுவும், தூதரகம் சார்பில் பதிவிடப்படவில்லை’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமரின் சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் மருத்துவர் காலித் இதுகுறித்து தெரிவிக்கையில், “வெளியுறவுத்துறையினர் எங்களுக்கு அளித்துள்ள தகவலின்படி தூதரகத்தின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான இந்த ட்வீட்டுகளை அடுத்து, ட்விட்டரில் பாகிஸ்தான் தூதரத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒருதரப்பினர் “சமூக வலைதள பக்கத்தைகூட தூதரகத்தாலும் அரசாலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை” என்று கேட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர், “கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவின் தேவையாவும் இருமடங்காகி உள்ளது” எனக்கூறுகின்றனர். தற்போதுவரை அரசு தரப்பு விளக்கத்தில் எந்த இடத்திலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதற்கும் விளக்கம் கேட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பாக்.முஸ்லிம் லீக்-ன் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீப், “குறிப்பாக நெய், எண்ணெய், சர்க்கரை, மாவுப்பொருள்கள், பால் பொருள்கள் யாவும் மிக அதிக விலையை தொட்டுள்ளது. இதனால் நாட்டில் பொருளாதார அழிவும் மற்றும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகிறது. ஆனால் அரசு இதை உணரவே இல்லை. இந்த பொருளாதார சீரழிவு, ஏழைகளுக்கு மட்டுமன்றி பணக்காரர்களுக்குமே கூட சிக்கலாகத்தான் அமைந்துள்ளது. அரசு இதை உணரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த சமூக வலைதள சார்ந்த சர்ச்சைகள், ஆட்சியாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதென்பது மட்டும் மறுப்பதற்கில்லை.