பெண்கள் மீதான வன்முறை கோப்புப்படம்
பெண்கள்

“அறத்தின் அளவுகள் இருவருக்கும் ஒன்றுதானே!” - வன்முறை ஆயுதமேந்தும் ஆண்கள்; தொடரும் பெண்களின் கொலைகள்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் நடு ரோட்டில் வைத்து தான் காதலித்த பெண்ணை ஸ்பேனரால் அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சண்முகப் பிரியா . செ, ஜெ.நிவேதா

பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல் குறித்த செய்திகள் நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பலவும் கேட்பதற்கே அச்ச தருவதாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்படுகின்றன. அதில் பாலியல் உறவு தொடர்பான, காதல் விவகாரங்கள் தொடர்ச்சியாக கொலைகள் நடப்பது மிகவும் இயல்பாக மாறிவிட்டதோ எண்ணும் அளவிற்கு நடக்கிறது. அதில் சமீபத்தில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்..

நண்பகலில் மும்பையை உலுக்கிய சம்பவம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் நடு ரோட்டில் வைத்து தான் காதலித்த பெண்ணை ஸ்பேனரால் அடித்தே கொலை செய்துள்ளார் ஒருவர். மிகவும் பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருந்த ஒரு சாலையில் ஒரு பெண்ணை இப்படி கொடூரமாக தாக்கி கொலை செய்வதற்கு எப்படி தைரியமும், மனமும் வருகிறது? அந்தப் பெண் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் ’என்னை ஏன் ஏமாற்றினாய்’ என்று கூறி அந்த இளைஞர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.

மகாராஷ்டிரா - நடு ரோட்டில் பெண்ணைக் கொன்ற இளைஞர்

கர்நாடகாவை உறைய வைத்த கொலை சம்பவம்!

கடந்த ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் கர்நாடகாவில் ஹுப்லி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலரின் மகள் கல்லூரியில் வைத்து கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அறங்கேறியிருந்தது. இந்த சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண் தன் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அப்பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காதலனால் கொல்லப்பட்ட பெண்

கர்நாடகாவை உலுக்கிய மற்றொரு கொலை சம்பவம்!

கடந்த மே மாத இரண்டாம் வாரத்திலும் அதே கர்நாடகாவில் இதேபோன்றொரு சம்பவம் நடந்திருந்தது. அதன்படி கர்நாடக மாநிலம் ஹூப்ளி அடுத்த பெண்டிகிரி பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்பவருக்கு நீண்ட நாட்களாக க்ரிஷ் என்றொரு ஆண் அவரைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே அவரை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலை

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று பெண்கள், தன்னைக் காதலிப்பதாகக் கூறிய ஆணை நிராகரித்ததால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இப்படி இன்னும் பல கொலைகள் இருக்கக்கூடும். இதில் எல்லாவற்றிலும் ஒரு கேள்விதான்... காதல் விவகாரத்தில் ஒரு பெண் உண்மையிலேயே ஏமாற்றி இருந்தாலும் ஏன் அவரை கொலை செய்யும் அளவிற்கு ஒரு ஆண் செல்ல வேண்டும்? மேற்சொன்னவற்றில் கொலை செய்யப்பட்ட பெண்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்பது இன்னொரு பக்கம். ஏமாற்றியே இருந்தாலும் ஏன் அவரை கொலை செய்ய வேண்டும்?

மேற்கண்ட எல்லா விஷயங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். பல தலைமுறைகளாகவே பெண்கள் பாதிக்கப்பட்ட இடத்திலேயே இருப்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. இது தொடர்வது ஏன்? கல்வி ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் நாம் இவ்வளவு முன்னேறிவிட்ட போதிலும், பெண்கள் பாதிகப்பட்ட இடத்திலேயே இருப்பது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு கம்யூனிஸ்ட் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பாலபாரதி அவர்கள் நம்மிடம் பேசுகையில்,

“சட்டம் சரியா செயல்படணும்!”

“என்னைப் பொறுத்தவரை, அரசாங்கமும் சட்டமும்தான் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு சட்டம் கடுமையாக இருக்கிறதென்றாலும், அதை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இதுவரை நீதிமன்றத்திற்கு சென்ற பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகள் எத்தனை, அதில் எத்தனை வழக்குகளுக்கு முடிவு கிடைத்துள்ளது, எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் - ஆகிய விவரங்களை பகிர்ந்தாலே நம்மால் சிக்கலை உணரமுடியும்.

இங்கே பல வழக்குகள் நிலுவலையிலேயே இருக்கின்றன. இதை முறையாக செய்ய வேண்டிய காவல்துறையே பல நேரங்களில் தவறிவிடுகிறது. சாதி, மத வேறுபாடின்றி இவர்கள் குற்றவாளிகளை முன்னிறுத்தி தண்டனை பெற்றுத்தருகிறார்களா என்றால், இல்லை.

ஆக, சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்; முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

“அரசு நவீனத்தின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால்...”

அடுத்தபடியாக அரசாங்கம். அரசு, நவீனமாக வேண்டும். வீதிக்கு வீதி தெருவிளக்கு வைப்பதுபோல கிராமப்புரங்களிலும் சிசிடிவி வைக்க வேண்டும். ஊராட்சி மன்றங்கள் அரசு இதை எளிமையாக செய்ய முடியும். இதைவிடுத்து, ‘இங்கே பெண்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என்று சொல்லில் மட்டும் சொன்னால், சரியல்ல. இன்றும் கிராமப்புறங்கள், ஊருக்கு வெளியான பகுதிகள் பெண்கள் அச்சத்துடனேயே இருக்கின்றனர். அந்த நிதர்சனத்தை நாம் உணரவேண்டும்.

பாலபாரதி

ஒவ்வொரு பத்தாண்டுக்கும், பெண் மீதான வன்முறையின் வடிவம் மாறும். 1950-களில் இருந்து பார்த்தால், உடன்கட்டை ஏறுதல் - குழந்தை திருமணம் - பெண் சிசுக்கொலை - ஆணவக்கொலை... இப்படி அது மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதில் தற்போதைய வடிவம், ‘தகவல் தொழில்நுட்ப உதவியால் நடக்கும் கொலை’. முன்பிருந்த யாவற்றையும், அரசுதான் கட்டுக்குள் கொண்டு வந்தது. அதேபோல் இதுவும் அரசால் முடியும். ஒரேயொரு விஷயம், அரசும் நவீனமாக வேண்டும்.

“சினிமாக்கள் பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும்”

மேலும் பாடப்புத்தகங்களில் ‘ஆண் - பெண் சமம்; பெண் நம் சக உயிர்’ என்பது போன்ற பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விஷயங்கள் இருக்க வேண்டும். இவையன்றி வெறும் மதிப்பெண்களை மட்டும் நோக்கி நாம் நம் பிள்ளைகளை ஓட வைக்கக்கூடாது.

இத்தோடு கலை இலக்கியங்களிலும், சினிமாக்களிலும் அங்குள்ள கலைஞர்கள் பெண்ணை சரியாக காட்ட வேண்டும். ‘பெண் ஒரு மலர், பூ’ என்றெல்லாம் காட்டுவது, பின் ‘அவளை அடையுங்கள், வெட்டுங்கள்’ என பாட்டுப்பாடுவது, நகைச்சுவை செய்வது என்றெல்லாம் இருப்பதை சினிமாக்கள் தவிர்க்க வேண்டும். நமக்கும் பொறுப்புள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

பாலின சமத்துவம் | Gender Equality

“ஒன்றுபட்ட இயக்கம் வரவேண்டும்”

இவர்களோடு நவீன கருத்தியல்களை மக்களும் அடைய வேண்டும். அப்படி அடைந்து, ஒரு சமூகமாக ஒன்றுபட்ட இயக்கத்தை நாம் முன்னெடுத்தால் மட்டுமே பெண்கள் மீதான எந்த காலத்திலான வன்முறைகளும் கட்டுக்குள் வரும், தீரும். இதற்கான முதல் முயற்சி, அரசிடம் இருந்து வரவேண்டியது என்பதால், அரசே அனைத்துக்கும் முதலானதென நான் கூறுவேன்” என்றார் அழுத்தமாக.

அறத்தின் அளவுகோல் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றுதானே!

இருநூறு வருடங்களுக்கு நாம் நிலத்தை மையமாக கொண்ட தந்தை வழி சமூக அமைப்பில் வாழ்ந்து வந்தோம். நிலத்தின் உரிமையாக சொத்தின் உரிமையாளராக ஆண்களே இருந்து கொண்டு பெண்களின் மீது அதீதமான ஆதிக்கத்தை செலுத்தி வந்தார்கள். சமூகத்தின் தன்மையே பெண்களுக்கு எதிரானதாக இருந்தது. எல்லைகள் வகுக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்கு வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு பெண்கள் ஆளாக்கப்பட்டனர்.

சொல்வொண்ணா துயரங்களை நீண்ட காலமாக அவர்கள் அனுபவித்து வந்தனர். சமூகம் சாதிய வேறுபாடுகளாலும், ஆண் பெண் வேறுபாடுகளாலும் நீக்கமற நிறைந்து காணப்பட்டது. அந்த சமூக அமைப்பில் இருந்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் என்ற அடிப்படையில் ஜனநாயக நாட்டில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம். இந்த சமூக அமைப்பில் தீண்டாமை கிடையாது, ஆண்- பெண் வேறு பாடு கிடையாது. சமூகத்தின் உள்ள ஒவ்வொருவரும் சமமானவர்களே என்று தான் நம்முடைய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.

ஆனாலும், இன்னும் நம்முடைய பழைய சிந்தனைமுறை முழுமையாக மாறவில்லை. குடும்பத்தில் சமூகத்தில் பெண்கள் மீது செலுத்தப்படுகின்ற ஆதிக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. குறிப்பாக குடும்ப அமைப்பில் பெண்கள் அதீதமான ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். கணவன், மனைவி மீதும், சகோதரன் - சகோதரி மீது ஒருவித ஆதிக்க மனோ நிலையிலே அணுகும் மனநிலை இன்னும் பலருக்கும் முற்றாகவில்லை.

ஒரு விஷயத்தை ஆண்களால் எளிதில் செய்துவிட முடிகிறது. ஆனால் பெண்களால் அது அணுக முடியாத இடத்தில் உள்ளது. படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் பெண்கள் போராடியே தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

அதேபோல், ஒரு தவறு என்று சமூகம் சொல்லும் விஷங்களில் ஆணிற்கு ஒரு அளவுகோலும் பெண்களுக்கு ஒரு அளவுகோலும் இருக்கிறது.

பெண்களை கலாசாரத்தின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் அடிமைப்படுத்தவே இன்றும் நினைக்கிறார்கள். ஒரு ஆண் செய்யும் அதே விஷயத்தை ஒரு பெண் செய்து விட்டால் வானிற்கும் பூமிக்கும் என குதிக்கிறார்கள். குறிப்பாக பாலியல் சார்ந்த விஷங்களில், காதல் விஷயங்களில் ஆண் செய்யும் அதே தவறை (சூழ்நிலை பொருத்து) பெண்கள் செய்துவிட்டால் ஏன் உயிரை எடுக்கும் அளவிற்கு செல்லும் மனநிலை இருக்கிறது. இந்த இடத்தில் பாரதியார் சொல்வதை நினைவு கூறலாம்..

ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?
நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?

..

கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

ஒரு அறத்திற்கான அளவுகோல் இருக்கிறதென்றால் அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதே. தங்களை ஏமாற்றிவிட்டார்கள், துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லி ஆண்கள் பெண்களை கொலை செய்ய இறங்குவது போல் பெண்களும் இறங்கினால் எப்படி இருக்கும்.

ஆண் - பெண் வேறுபாடில்லாத நாகரீக சமூகத்தை நோக்கி நாம் முன்னேறி செல்ல வேண்டும். வன்முறையை கைவிட்டு மெச்சூரிட்டியாக சூழலை அணுக கற்றுக் கொள்ள வேண்டும்