நாகையில் உள்ள புதிய முகமதியார் தெருவை சேர்ந்தவர் ராமாமிர்தம். 77 வயதான அவர், பலருக்கும் நீச்சல் பயிற்சி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தள்ளாடும் வயதிலும் தளராமல் நீச்சல் சொல்லிக்கொடுக்கும் அந்த மூதாட்டியின் செயலை பார்த்து பிரமித்த நாகை எஸ்பி ஹர்சிங், மூதாட்டியை பாராட்ட அவரது வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.
தங்களது இல்லத்துக்கு எஸ்பி வருவதை வியந்து பார்த்த மூதாட்டி ராமாமிர்தத்தின் குடும்பத்தினர், அவருக்கு உற்சாக வரவேற்பளித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் மூதாட்டியின் நீச்சல் பயிற்சிகள் குறித்து அவருடன் உரையாடிய நாகை எஸ்பி, “இளைய தலைமுறைகள் உடலும் மனமும் நலம்பெற கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி ராமாமிர்தம், “எனது 10 வயதில் என் தந்தை என்னை கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்தார். தந்தையை ஆசானாக ஏற்றுக் கொண்டு பல வகையான நீச்சலை கற்றுக்கொண்டேன்.
தற்போது கற்றதை பிறருக்கு பயிற்றுவித்து வருகிறேன். எனக்கு தெரிந்த நீச்சல் கலையை, சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள் என பலருக்கும் அவர்களின் ஓய்வு நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் கற்றுக் கொடுக்கிறேன்.
என்னிடம் 5 வயது முதல் 40 வயது வரை உள்ள பலரும் நீச்சல் கற்றுக்கொள்ள வருகிறார்கள். வயதானாலும் கற்பிக்கும் ஆர்வம் தொடர்வதால், அவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகிறேன். நீச்சல் கற்றுக் கொடுப்பதால் எனது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. ஆபத்து காலங்களில் நீச்சல் பயிற்சி கட்டாயம் உதவும்” என்று கூறினார்.