சிக்கிம் மாநில முதலமைச்சரான பிரேம் சிங் தமாங் நேற்று அம்மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் (SSCSOA) ஆண்டு பொது கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை (Maternity Leave) வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம். தந்தைகளுக்கு 1 மாத விடுப்பு (Paternity Leave) அளிக்கப்பட உள்ளது” என தெரிவித்தார். இச்சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார் முதல்வர் பிரேம் சிங்.
மேலும் பேசிய அவர், “அரசு ஊழியர்கள் தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள இது உதவும். இச்சட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இச்சட்டத்தை அமல்படுத்த, சேவை விதிகளில் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. அவை விரைந்து செய்யப்படும்.
சிக்கிமின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி இவை இரண்டின் மேம்பாட்டிற்க்கும் பங்களிப்பை அளித்து, மாநில நிர்வாகத்தின் முதுகெலும்பாக சிவில் சர்வீஸ் அதிகாரிகள் திகழ்கின்றனர். அதிகாரிகளுக்கான பதவி உயர்வு செயல்முறையை சீரமைப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது” என்றார்.
தற்போது அமலிலுள்ள மகப்பேறு சட்டம் 1961 இன் படி, பணிபுரியும் பெண்ணுக்கு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை இருக்கிறது.
இந்த 6 மாதம் என்ற அளவுகோலை உயர்த்தவேண்டுமென கடந்த மே மாதம், NITI ஆயோக் உறுப்பினர் VK பால், “இந்தியாவின் அரசு மற்றும் தனியார் துறைகளில் மகப்பேறு விடுப்பு ஆறு மாதங்களில் இருந்து ஒன்பது மாதங்களாக அதிகரிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். இப்படியான சூழலில் சிக்கிமில் ஒரு வருட விடுப்பு என்ற புதிய நடைமுறையை அம்முதல்வர் கூறியுள்ளார். இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கர்ப்பிணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
முன்னதாக கடந்த மே மாதம் சிக்கிமில் 2 அல்லது 3 குழந்தைகள் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பாணை வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் 2 குழந்தைகள் வைத்திருந்தால், ஒரு முன்பணம் பெறலாம்; 3 குழந்தைகள் வைத்திருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு பெறலாம் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றை தொடர்ந்து தற்போது மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது. சிக்கிம் தான் இந்தியாவிலேயே குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம் என்பதால், குழந்தை பிறப்பை அதிகப்படுத்தவே அம்மாநில அரசு இப்படியான புதுப்புது முயற்சிகளை செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
- Jenetta Roseline S